இந்தியாவில் 40 ஆண்டுகள் இல்லாத அளவில் கடும் பொருளாதார நெருக்கடி!
2020- 21 நிதியாண்டுக்கான மத்திய அரசின் வருவாய் - செலவின விவரத்தை, கணக்குத் தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி 2020-21 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 புள்ளி 3 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முந்தைய நிதியான 2019-20-ல் 4 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி தற்போது கடும் சரிவை சந்தித்துள்ளது. இது 40 ஆண்டுகளில் இல்லாத சரிவு என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ரிசர்வ் வங்கியும், மத்திய புள்ளியியல் துறையும் 8 சதவீதம் வரை வீழ்ச்சி இருக்கும் என கணித்த நிலையில் அதை விட சற்று குறைவாகவே பொருளாதார வளர்ச்சி சரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் 2020-21 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் அதாவது ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் முந்தைய காலாண்டை விட 1 புள்ளி 1 சதவீதம் அதிகரித்து 1.6 சதவீதமாக உயர்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அதற்கு வணிக முதலீடுகள் அதிகரித்ததும் மத்திய அரசு செலவினத்தை அதிகரித்ததும் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த நிதியாண்டின் நிதிப் பற்றாக்குறையானது 9.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. எனினும் இது மத்திய அரசு கணித்த வீழ்ச்சி விகிதத்தை விட சற்று குறைவாகும்.
Tags :