தமிழகத்துக்கு 4.2 லட்சம் கோவிஷீல்ட்  தடுப்பூசி டோஸ்கள் விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தன

by Editor / 01-06-2021 07:39:57pm
தமிழகத்துக்கு 4.2 லட்சம் கோவிஷீல்ட்  தடுப்பூசி டோஸ்கள் விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தன

 

தமிழகத்துக்கு 4.2 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி டோஸ்கள் விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தன.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை கடந்த சில தினங்களாகப் படிப்படியாகக் குறைந்துவருகிறது. (மே 31) தமிழகத்தில் 27,936 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் 2,596 பேர் பாதிக்கப்பட்டனர்.  478 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 3,01,781 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  31,223 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் தகுதியானோருக்குத் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக, தமிழகத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி மருந்துகள் கையிருப்பு தீர்ந்ததால், தமிழகத்தில் ஜூன் 3-ம் தேதி முதல் 3 நாட்களுக்குத் தடுப்பூசி போடுவது நிறுத்தப்படும் என, மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார்.
இந்நிலையில்,  மேலும் 4,20,570 கோவிஷீல்ட் தடுப்பூசி டோஸ்கள் விமானம் மூலம் சென்னை வந்தடையும் என, தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து இருந்தது.அதன்படி, மத்திய அரசின் சார்பில், தமிழகத்துக்கு 4,20,570 கோவிஷீல்ட் தடுப்பூசி டோஸ்கள் விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தன. இந்த மருந்துகள், சென்னை விமான நிலையத்திலிருந்து சென்னை டிஎம்எஸ் வளாகத்திற்குக் கொண்டு செல்லப்படும். பிறகு அங்கிருந்து, மக்கள்தொகைக்கு ஏற்ப மாவட்டங்களுக்குத் தடுப்பூசி மருந்துகள் பிரித்து அனுப்பப்படும்.

 

Tags :

Share via