ஊரடங்கு காலத்தில் தேவையின்றி ஊர்சுற்றியவர்களின் பிடிபட்ட வாகனங்களை தர வேண்டாம்! - காவல்துறை!

by Editor / 04-06-2021 07:12:44am
ஊரடங்கு காலத்தில் தேவையின்றி ஊர்சுற்றியவர்களின்  பிடிபட்ட வாகனங்களை  தர வேண்டாம்! - காவல்துறை!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு வரும் 7-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீஸார் கண்காணித்து வருகின்றனர். அவசர தேவைக்காக செல்பவர்கள், இ-பதிவு செய்த வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

தேவையின்றி வெளியே சுற்றுபவர்களின் வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து, அபராதம் விதித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் கடந்த 9 நாட்களில் சுமார் 1.10 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்களின் தன்மைக்கு ஏற்ப, ரூ.600 முதல் ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருப்பி வழங்க வேண்டாம் என்று காவல் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

''பறிமுதல் செய்த வாகனங்களை திருப்பி வழங்கினால், மீண்டும் தேவையின்றி சுற்றுவார்கள். எனவே, ஊரடங்கு முடியும் வரை வாகனங்களை திருப்பித் தர வேண்டாம். அந்த வாகனங்களை நிறுத்துவதற்கு, காவல் நிலைய வளாகத்தில் இடம் இல்லாவிட்டால், அருகே உள்ள பள்ளி, கல்லூரி மைதானங்களில் நிறுத்திவைக்கலாம்'' என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த 54 நாட்களில் முகக் கவசம் அணியாதவர்கள் மீது 12.39 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் கடந்த 2 நாட்களில் 3 போலீஸார் உயிரிழந்துள்ளனர். அவர்கள் குடும்பத்துக்கான தேவைகள் குறித்தும் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

 

Tags :

Share via