அன்னதானம் சாப்பிட சென்ற பார்வையற்ற பெண்ணைத் தாக்கிய அறநிலையத் துறையினர்

by Editor / 26-07-2022 04:30:22pm
அன்னதானம் சாப்பிட சென்ற பார்வையற்ற பெண்ணைத் தாக்கிய  அறநிலையத் துறையினர்

திருப்பூர் மாவட்டம், அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில்  தினமும் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இங்கு டோக்கன் முறையில் தினமும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சேவூரைச் சேர்ந்த இந்திராணி என்ற 38 வயது பார்வையற்ற பெண்ணும், அவரது தாயாரும் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு அன்னதான கூடத்திற்கு சாப்பிடச் சென்றுள்ளனர். இருவரும் சாப்பிடுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த போது, ஊழியர்கள் இருவருக்கும் டோக்கன் வழங்காமல் பின்னால் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி சாப்பிட அனுமதித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இந்திராணி, ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வாக்குவாதம் முற்றியதில் ஊழியர்கள், அவர்கள் இருவரையும் தாக்கி வெளியே துரத்தியுள்ளனர். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.இதனால் மனமுடைந்த தாயும், மகளும், கோயில் அலுவலகத்தில் இருந்த செயல் அலுவலர் மருதுபாண்டியிடம் முறையிட்டனர். இதனைக் கேட்ட அவர், அன்னதானக் கூட சிசிடிவியை ஆய்வு செய்து, தாக்குதல் நடத்தியதை உறுதி செய்தார். இதையடுத்து, தாக்குதல் நடத்திய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அன்னதானக் கூடத்திற்கு சாப்பிட சென்ற பெண்கள்  மீது அறநிலையத் துறை ஊழியர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் கோயில் பக்தர்களிடையே பெரும் அச்சத்தையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 

 

Tags : The charity department attacked a blind woman who went to eat alms

Share via