மைக் மேனியா நோயால் அவதிப்படுகிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் -திமுக எம் எல் ஏ பேட்டி
சென்னை ராயபுரத்தில் அத்தொகுதி எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
காயிதே மில்லத் பிறந்த நாளன்று திருவல்லிக்கேணியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார், அந்த கருத்துக்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை.
முதல்வர் சொல்வதை அதிகாரிகளும் கேட்பதில்லை, மக்களும் கேட்பதில்லை என்பது அவர் சொன்ன அபாண்ட குற்றச்சாட்டு, கோவையில் கொரோனா வார்டுக்கே பாதுகாப்பு கவச உடையுடன் துணிச்சலுடன் சென்று ஆய்வு செய்தவர் முதல்வர் ஸ்டாலின். அதை எம்ஜிஆர் அமைச்சவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் ஹண்டேவே பாராட்டியிருக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் மே 7ம்தேதி தான் பதவியேற்றார், கடந்த மே 3 ம்தேதி கொரோனா நோய்த்தொற்று 6000 பேருக்கு இருந்தது, அது குறித்து முதல்வராக இருந்த இபிஎஸ், துணை முதல்வராக இருந்த ஒபிஎஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆனால் முதல்வர் ஸ்டாலின் அவர்களை பற்றி எந்த விமர்சனமும் செய்யாமல் களத்தில் இறங்கினார்.
இப்போது சென்னையில் கொரோனா நோய்த்தொற்று 1,600 ஆக குறைந்திருக்கிறது, முதல்வர் திறம்பட செயலாற்றியதால் தான் நோய்த்தொற்று குறைத்திருக்கிறது.
முதல்வர் சொல்வதை அதிகாரிகள் கேட்டு செயல்பட்டதால் நோய்த்தொற்று சரிந்திருக்கிறது, முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றபோது ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது, இப்போது தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. 3444 மெட்ரிக் டன் என்ற அளவுக்கு ஆக்சிஜன் இருப்பு அதிகரித்திருக்கிறது.
முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை புறந்தள்ளுங்கள், அவரை விரட்டியடியுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று கிட்டதட்ட 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயகுமாரை மக்கள் தோற்கடித்தார்கள். ராயபுரத்தில் இருந்து மயிலாப்பூருக்கு விரட்டியடித்தார்கள்.
ஒரு அரசை விமர்சிக்க 3 மாதம் அல்லது 6 மாதம் அவகாசம் தர வேண்டும். அதற்குள் விமர்சிப்பது அரசியல் நாகரீகம் ஆகாது, இந்த அரசை இபிஎஸ்சும் ஒபிஎஸ்சுமே பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு கொண்டாடக்கூடிய அரசாக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இருக்கிறது.
அரசின் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும், முதல்வரின் நடவடிக்கைகள்ஆக்கப்பூர்வமாக இருக்கின்றன என்று எல்லா ஊடகங்களும் சொல்கின்றன, தலைவர்கள் பாராட்டுகிறார்கள், ஜெயகுமார் மட்டும் திட்டிக்கொண்டிருக்கிறார்.
ஜெயகுமார் கடந்த 2 மாதங்களாக மைக் பிடித்து பொதுக்கூட்டங்களில் பேச முடியவில்லை, அவரை தேடி தொலைக்காட்சிகள் வரவில்லை, மைக்குகளைப் பார்க்க முடியாததால் மைக் மேனியா நோயால் அவதிப்படுகிறார். அவர் மீடியா அலர்ஜியால் பீடிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு ஐ ட்ரீம் மூர்த்தி தெரிவித்தார்.
Tags :