தூய்மைபணியாளர்கள் வேதனை

by Staff / 13-09-2022 02:18:57pm
தூய்மைபணியாளர்கள் வேதனை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கடந்த பல வருடங்களாக ஒப்பந்தத்தின் அடிப்படையில் 63 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு மாத சம்பளமாக 7,750 கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது தமிழக அரசு தூய்மை பணியாளர்களுக்கு 12,720 ரூபாயாக சம்பள உயர்த்தி கொடுத்துள்ளது. ஆனால் நேற்று சம்பளம் வாங்க சென்ற தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்ததாரர் 250 ரூபாய் மட்டுமே உயர்த்தி எட்டாயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார்.

ஆனால் தூய்மை பணியாளர்கள் மாத சம்பளமாக எட்டாயிரம் ரூபாயை வாங்க மறுத்து அரசு எங்களுக்கு நிர்ணயத்தை தொகையை கொடுங்கள் என கேட்டிருக்கின்றனர்.
அதற்கு ஒப்பந்ததாரர் ராஜசேகர் நான் 8000 ரூபாய் தான் தருவேன். விருப்பமுள்ளவர்கள் வேலை செய்யுங்கள். இல்லையெனில் வேலையை விட்டு போய் விடுங்கள் என்று கூறியிருக்கிறார். மனம் உடைந்து போன தூய்மை பணியாளர்கள் சம்பளத்தை பெற்றுக் கொள்ளாமல் வெளியேறி இருக்கின்றனர்.

இது குறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், நாங்கள் காலை 6 மணிக்கு வேலைக்கு செல்கிறோம். எங்களுக்கு குப்பை அள்ளுவதற்காக எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் கொடுப்பதில்லை. கை கிளவுஸ் இல்லாமல் மக்கும் குப்பை மக்காத குப்பை தனித்தனியாக பிரித்து எடுக்கும் போது பாட்டில் ஓடுகள், ஊசி போன்ற பொருட்கள் கையில் குத்தி விடுகிறது. இதுபோன்று எங்களுக்கு காயங்கள் ஏற்படும் போது மருத்துவ செலவு நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்றனர்.

இவ்வாறு மக்களுக்காக பணியாற்றும் எங்களுக்கு அரசு நிர்ணயித்த மாத சம்பளத்தை தர வேண்டும். குப்பை அள்ளுகிற வேலையை ஏளனமாக பார்க்காமல் எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. செலவுகள் இருக்கிறது. என்பதை கருத்தில் கொண்டு எங்களுடைய சம்பளமான 12,720 ரூபாய் பணத்தை தயவு செய்து மாத மாதம் சரியாக கொடுப்பதற்கு அரசு வழி வகுக்க வேண்டும் என்று வேதனையோடு கோரிக்கை வைத்தனர்.

இதனிடையே, ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் ஒரு தெருவில் கூட மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து போடுவதற்கான உபகரணங்கள் வைக்கவில்லை என்பதால் குப்பைகள் தெருவில் கொட்டப்பட்டு ஈக்கள் சூழ்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

Tags :

Share via