ஒவ்வொரு ஏடிஎம் பரிவர்த்தனைக்கும் ரூ.21 கட்டணம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பல ஆண்டுகளாக வழக்கம் இருந்துவரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் இல்லாமல் இருந்தது. ஆனால் அடுத்தடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின்படி ஏடிஎம்மில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் என்று ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் தற்போது இலவச பரிவர்த்தனையை தாண்டி ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.21 வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒவ்வொரு வங்கி ஏடிஎம்களிலும் மாதாந்த இலவச பரிவர்த்தனை வரம்பைத் தாண்டி ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து ஒரு பரிவர்த்தனைக்கு இதுவரை ரூபாய் 20 வசூல் செய்யப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு முதல் அதாவது 2022ஆம் ஆண்டு முதல் இலவச பரிவர்த்தனை தாண்டி ஏடிஎம்மில் எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூபாய் 21 வசூலிக்கப்படும் என்றும் இந்த நடைமுறை ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நம்முடைய பணத்தை எடுப்பதற்கு நமக்கே கட்டணமா என்று இந்த அறிவிப்பு குறித்து பொதுமக்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
Tags :