72 வயது முதியவருக்கு காதணி விழா அசத்திய வாரிசுகள்

by Staff / 25-09-2022 11:42:09am
 72 வயது முதியவருக்கு காதணி விழா அசத்திய வாரிசுகள்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுல்தான் பேட்டையை சேர்ந்தவர் வரதராஜன். 72 வயதான இவருக்கு நான்கு பெண்கள், ஒரு ஆண் என 5 பிள்ளைகள் உள்ளனர். இவரது மனைவி கடந்த 2019ம் ஆண்டு உயிரிழந்த நிலையில், தனது மகன் வீட்டில் வசித்து வரும் வரதராஜன், டி.வி.எஸ்.நிறுவனத்தில் 28 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

காலங்கள் ஓடிய நிலையில், தற்போது இவருக்கு 5 பேரன்களும், 3 பேத்திகளும் உள்ளனர். இவர்கள் தங்களது தாத்தாவிடம் ஏன் இதுவரை நீங்கள் காது குத்திக்கொள்ளவில்லை என கேட்டுள்ளனர். அதற்கு, குழந்தை பருவத்தில் குலதெய்வ கோவிலுக்கு காது குத்த சென்றபோது, எதிர்பாராத விதமாக விழாவிற்கு கொண்டு சென்ற தங்க தோடுகள், புது துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனதால் அந்த விழா நடக்காமல் காது குத்தாமல் தனது பெற்றோர் விட்டுவிட்டனர்  என அந்த கால கதையை மனவேதனையுடன் கூறியுள்ளார்.

இதையடுத்து, தாத்தாவுக்கு எப்படியாவது காதணி விழா நடத்தியே ஆக வேண்டும் என நினைத்த பேரன், பேத்திகள்,அதனை சிறப்பாகவும் நடத்தி முடித்தனர். மேலும், தங்களது தாத்தாவுக்கு சீர் கொடுத்தும் அவர்கள் மகிழ்ந்தனர். சொந்தம், பந்தம், பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல், நவீன கால வாழ்க்கைக்கு தயாராவதே தற்போதைய டிரெண்ட் என வாழ்ந்து வரும் சில இளைஞர்களுக்கு மத்தியில், தங்களது தாத்தாவுக்கு காதணி விழா நடத்தி அழகு பார்த்த பேரப்பிள்ளைகளின் செயல் காண்போரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.ஆலமரமாக இருந்த கூட்டுக்குடும்பம் என்ற கூட்டாஞ்சோறு சமையல் இன்று தனிக்குடித்தனமாக மாறிபாஸ்ட் புட் ஆக மாறி வரும் நிலையில் இந்த குடும்பத்தினரின் கொண்டாட்டம்  மறக்கமுடியாத நினைவலைகளை உருவாக்கியது.
 

 72 வயது முதியவருக்கு காதணி விழா அசத்திய வாரிசுகள்
 

Tags :

Share via