சர்வதேச போதைப் பொருள் கடத்தல் நபர் சிறையில் அடைப்பு!
தூத்துக்குடி கடலோரப் பகுதியில் நேற்று முன்தினம் சந்தேகத்துக்கிடமாக சுற்றித் திரிந்த இங்கிலாந்து நாட்டின் லிட்டில் ஹாம்ப்டன் பகுதியைச் சேர்ந்த ஜோனாதன் தோர்ன்(47) என்பவரை, கியூ பிரிவுடிஎஸ்பி சந்திரகுமார் தலைமையிலான போலீஸார் பிடித்தனர்.
விசாரணையில் 2018 ஜூனில் மும்பை, பரோடா, கோவா ஆகியஇடங்களில் அடுத்தடுத்து கேட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 12 பேரில் ஜோனாதன் தோர்னும் ஒருவர் என்பது தெரியவந்தது. இவரிடம், ஓவர்சீஸ் சிட்டிசன் ஆஃப் இந்தியா (ஓசிஐ) என்ற சான்று உள்ளது. இவர், கோவாவில் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவாவில் இருந்து பெங்களூரு வழியாக காரில் தூத்துக்குடி வந்தஅவர், கள்ளத்தனமாக படகு மூலம்இலங்கைக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து இங்கிலாந்து மற்றும்இந்திய பாஸ்போர்ட்கள், 2 ஐபோன்கள், ரூ.2 லட்சம் மற்றும் இலங்கை, ஐக்கிய அரபு நாடுகளின் பணம் பறிமுதல் செய்யப்பட்டன. 2 பாஸ்போர்ட்களும் போலியானவை என்பது தெரியவந்தது.
ஜோனாதன் தோர்னை போலீஸார் கைது செய்து, தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர் ராஜகுமரேசன் முன்பு ஆஜர்படுத்தினர். அவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதால், அவரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, கியூ பிரிவு போலீஸார், அவரை சென்னைக்கு அழைத்துச் சென்று நேற்று புழல் சிறையில் அடைத்தனர்.
Tags :