தென்மாவட்டங்களை கலக்கிய பிரபல ரவுடிக்கும்பல் கைது.

by Editor / 04-10-2022 08:13:59am
தென்மாவட்டங்களை கலக்கிய பிரபல ரவுடிக்கும்பல் கைது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட மாவடிக்கால் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் தங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஏஎஸ்பி சார்லஸ்கலைமணி மற்றும் புளியங்குடி டிஎஸ்பி அசோக் தலைமையில் அங்கு சென்ற 50-க்கும் மேற்பட்ட போலீசார் மாவடிக்கால் பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அந்த பகுதியில் உள்ள பருத்திவிளை தெருவில் உள்ள ஒரு வீட்டில் அந்த கும்பல் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அதனைதொடர்ந்து, அவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது, அங்கு பதுங்கி இருந்தவர்களில் ஒருவர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ் கண்ணன் (எ)நெட்டூர் கண்ணன்(வயது 35) என்பது தெரியவந்தது.

மேலும், அவர் மீது 46 வழக்குகள், 9 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இதுவரை 9 முறை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, நெட்டூர் கண்ணனையும், அவருடன் இருந்த சங்கன்திரடு பகுதியை சேர்ந்த முப்புடாதி (எ) அறு(வயது 27), அய்யனார்குளம் பகுதியை சூர்யா(20), ஊத்துமலை பகுதியை சேர்ந்த மாரிமுத்து(34), ரஸ்தா பகுதியை சேர்ந்த லட்சுமணன்கந்தன் (27), அய்யனார்குளம் பகுதியை சேர்ந்த சத்யா (22) ஆகிய 6 பேர் மீது பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தல், சதிதிட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்து இரண்டு பெரிய அரிவாள்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

அதனைத்தொடர்ந்து, அந்த கும்பல் கடையநல்லூர் பகுதியில் தங்கியிருந்தது எதற்கு? அவர்கள் வேறெதுவும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சதி திட்டம் ஏதேனும் தீட்டீனார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது கைது செய்யப்பட்ட நெட்டூர் கண்ணன் மற்றும் முப்புடாதி (எ) அறு மீது நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், மற்ற 4 பேர் மீது ஒரு சில வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இவர்கள் 6 பேர் மீது மொத்தமாக 80 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 6 பேரையும் கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று உரிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகு, சங்கரன்கோவில் நீதிமன்ற நடுவர் சிவராஜேஷ் முன்னிலையில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags : தென்மாவட்டங்களை கலக்கிய பிரபல ரவுடிக்கும்பல்

Share via

More stories