ஒரகடத்தில் தீயணைப்பு நிலையம் இல்லாததால் அபாயம்
ஒரகடம் அருகே 'காஸ்' சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்றதில் மூவர் இறந்தனர். தொழிற்சாலைகள் நிறைந்த ஒரகடம் பகுதியில் தீயணைப்பு நிலையம் இல்லாததால், தொலை துாரத்தில் இருந்து வந்த தீயணைப்பு வாகனங்களால் தாமதம் ஏற்பட்டு பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதுார்-- சிங்கபெருமாள்கோவில் நெடுஞ்சாலை, வண்டலுார- -வாலாஜாபாத் நெடுஞ்சாலை இணையும் பகுதியில் ஒரகடம் அமைந்துள்ளது. ஒரகடம் சிப்காட்டில், கார், லாரி, மோட்டார் சைக்கிள், டயர் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலை அமைந்துள்ளன. இங்கு பல ஆயிரக்கணக்கானோர் பணியாற்றுகின்றனர்.
ஒரகடம் சுற்று புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகாளாக இருந்தும், இதுவரை ஒரகடம் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்கவில்லை.
இதனால், தீவிபத்து மற்றும் வேறு சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால், 15 கி. மீ. , துாரம் உள்ள ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள், ஒரகடம் வந்து தீயை அணைக்க வேண்டியுள்ளது. போக்குவரத்து நெரிசலில் ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து ஒரகடம் பகுதிக்கு தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் தீயை கட்டுபடுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.அதன்பின் வாகனங்கள் வந்து தீயை அணைத்தாலும் அதிக அளவில் சேதாரங்கள் ஏற்படுகின்றன. ஒரகடத்தில் தீயணைப்பு நிலையம் அமைந்தால், சுற்று வட்டத்தில் தீ விபத்து நிகழ்ந்ததால், விரைந்து சென்று தீயை அணைக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்
Tags :