எம்எல்ஏ அலுவலகங்களில் இ-சேவை மையம் - முதல்வர்
தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களில் இ-சேவை மையங்களை தொடங்கி வைத்து, அம்மையங்களுக்கான நவீன மேசை கணினிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு முன்னிலையில், 9 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நவீன மேசை கணினிகள், பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லையும் வழங்கினார்.இதனைத் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ-சேவை மையத்தை தொடங்கிடும் வகையில் முதலமைச்சரும், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மு. க. ஸ்டாலினிடம், நவீன மேசை கணினி, பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, அரசு இ -சேவை மையங்களை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் நடத்தி வருகிறது. இதனை மேம்படுத்தும் வகையில், மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களிலும் இ - சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக சட்டமன்ற பேரவைச் செயலகத் துறை சார்பாக 234 சட்டப்பேரவை உறுப்பினர்களின் அலுவலகங்களிலும் இ-சேவை மையங்கள் அமைப்பதற்காக நவீன மேசை கணினிகள் வழங்கப்படுகிறது.
இந்த வசதிகளை பயன்படுத்தி இ-சேவை வலைதளத்திலிருந்து tnesevai.tn.gov in இணைய வழிச் சேவைகளை மக்களுக்கு வழங்க 234 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் பயனர் எண் மற்றும் கடவுச்சொல் (User ID & Password) தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் உருவாக்கி அளிக்கப்பட்டுள்ளது.
Tags :