தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

by Editor / 27-10-2022 07:59:00am
தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2014ஆம் ஆண்டு ரூ. 4.5 கோடி  மதிப்பில், 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அளித்திருந்தார். அது மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் வங்கிப் பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அதிமுகவின் பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த வரை, ஒவ்வொரு ஆண்டும் தேவர் குருபூஜை விழாவின் போது அவரும், தேவர் நினைவிட அறங்காவலர் காந்திமீனாவும் வங்கிக்கு நேரில் வந்து கையெழுத்திட்டு, கவசத்தை பெற்று, குருபூஜை முடிந்த பின்னர் அதனை மீண்டும் வங்கியில் ஒப்படைத்து வந்தனர்.

இந்நிலையில் அதிமுக உட்கட்சி பூசல்களால் ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த செப்.30 ஆம் தேதியன்று வங்கிக்கு நேரில் வந்து கவசத்திற்கு உரிமை கோருவதற்கான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்.

பின்னர் அக்டோபர் 3ஆம் தேதி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், தர்மர் ஆகியோரும் தங்க கவசத்திற்கு உரிமை கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். இந்த விவகாரத்தில் இரு தரப்பினருக்கும் கவசத்தை தர வங்கி நிர்வாகம் மறுத்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் திண்டுக்கல் சீனிவாசன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், அக்டோபர் 18-ம்
தேதி வழக்கு தொடர்ந்தார்.

அதே வழக்கில் இடையீட்டு மனுவாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, இரு தரப்பினர் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இருவருக்கும் கவசத்தை தர உத்தரவிட மறுப்பு தெரிவித்து, மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் தங்க கவசத்தை ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில், மதுரை அண்ணாநகர் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளைக்கு வந்த மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள், கையெழுத்திட்டு தங்கக் கவசத்தை பெற்றனர். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், கவசம் சாலை மார்க்கமாக பசும்பொன் எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த தங்கக் கவசம் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர் வசம் ஒப்படைக்கப்ப்பட்டது. தொடர்ந்து தேவர் திருஉருவ சிலைக்கு கவசம் அணிவிக்கப்பட்டது.துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு சிலைக்கு போடப்பட்டுள்ளது.அக்.28,29,30 ஆகிய மூன்று நாட்கள் குருபூஜை விழா முடிந்து நவம்பர் 1 ஆம் தேதியன்று மீண்டும் தங்க கவசம் இதே நடைமுறையின் படி வங்கி நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.
 

 

Tags :

Share via