பிரியாணி கடை உரிமையாளர் வெட்டி படுகொலை
சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி ஆசாத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகூர் கனி இவர் அயனாவரம் மார்க்கெட் பகுதி சாலையில் கரீம் பிரியாணி கடை என்ற பிரியாணி கடை நடத்தி வந்தார்.
இந்நிலையில், வழக்கம்போல் நேற்று மாலை இரவு உணவுக்காக கடை ஊழியர்களுடன் பிரியாணி செய்து கொண்டிருந்தார். அப்போது மாலை 7 மணியளவில் சிகரெட் பிடிப்பதற்காக கடையின் எதிரே நிறுத்தியிருந்த ஆட்டோவில் அமர்ந்திருந்தபோது 3 இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த 6-க்கும் மேற்பட்ட நபர்கள் நாகூர் கனியை ஆட்டோவில் இருந்து வெளியே இழுத்துப்போட்டு இரும்பு ராடால் தலையில் அடித்துள்ளனர்.
பின்னர் மர்ம நபர்கள் பட்டாக்கத்தியால் அவரை தலையில் சராமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடினர். இந்த தாக்குதலில் நாகூர் கனி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அயனாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கொலை நடந்த இடத்தில் கீழ்பாக்கம் காவல் துணை ஆணையர் கோபி நேரில் விசாரணை நடத்தினார். தொடர்ந்து அயனாவரம் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நாகூர் கனி மீது காவல் நிலையங்களில் மோதல் வழக்குகள் நிலுவையில் உள்ளதும்,இரண்டு மாதத்திற்கு முன்னர் அவரது பிரியாணி கடையில் மாமூல் கேட்டு ரவுடிகள் வந்தபோதும் மோதல்ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.அந்த மோதலுக்கு இந்த கொலைக்கும் தொடர்பு உள்ளதா எனவும் போலீசார் விசாரணையை நடத்திவருகின்றனர்.
மேலும், தப்பிச்சென்ற மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னையில் மார்க்கெட் பகுதியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த வேளையில் சினிமா பாணியில் பிரியாணி கடை உரிமையாளரை மர்ம நபர்கள் வெட்டிப்படுகொலை செய்த சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :