முதல்கட்டமாக 46 கோயில்களில்  சித்த மருத்துவமனைகள் திறக்க ஏற்பாடு

by Editor / 22-06-2021 04:28:29pm
 முதல்கட்டமாக 46 கோயில்களில்  சித்த மருத்துவமனைகள் திறக்க ஏற்பாடு




தமிழகத்தில் அனைத்துக் கோயில்களிலும் வரும் டிசம்பருக்கு பின்புசித்த மருத்துவமனைகளை அமைக்க முடிவு செய்துள்ள இந்துஅறநிலையத் துறை, முதல்கட்டமாக 46 முதல்நிலை கோயில்களில் திறக்க ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் மட்டும் 40,000கோயில்கள் உள்ளன. இக்கோயில்களின் சொத்துகள், வருவாய் அடிப்படையில் முதுநிலை, இரண்டாம்நிலை, மூன்றாம்நிலை, நான்காம்நிலை என கோயில்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.மதுரை மீனாட்சியம்மன், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி,பழநி தண்டாயுதபாணி சுவாமி,திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில்கள் உட்பட 46 புகழ்பெற்ற முதுநிலை கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்கள் உட்பட மொத்தம் 49 கோயில்களில் 1970-ம் ஆண்டு திமுக ஆட்சியில் பாரம்பரிய சித்த மருத்துவமனைகள் திறக்கப்பட்டன. பின்னர்ஆட்சி மாற்றம் உட்பட பல்வேறு காரணங்களால் காலப்போக்கில் சித்த மருத்துவமனைகள் மூடப்பட்டன.
தற்போது திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், மருதமலை, ராமேசுவரம், வடபழனி, திருத்தணி ஆகிய6 கோயில்களில் மட்டுமே சித்தமருத்துவமனைகள் செயல்படுகின்றன. இந்த மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் மதுரை வந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு,விரைவில் அனைத்துக் கோயில்களிலும் பாரம்பரிய சித்த மருத்துவமனைகள் அமைக்கப்படும், என்றார்.
இது குறித்து சித்த மருத்துவர்கள் கூறியதாவது: சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். இயற்கையில் கிடைக்கக் கூடிய புல், பூண்டு, மரம், செடி,கொடி, வேர், பட்டை, இலை, பூ,பிஞ்சு, காய், பழம், வித்து முதலிய மூலிகைப் பொருட்களைக் கொண்டு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த கரோனா நெருக்கடியிலும் 6 கோயில்களில் சித்த மருத்துவமனைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. கசாயம் வழங்குவது, நோய் தன்மைகளுக்கு ஏற்ப மாத்திரைகள், சத்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. நாளொன்றுக்கு 60 முதல் 70 நோயாளிகள் இந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
சித்த மருத்துவமனைகள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதால் தற்போது கோயில்களில் உள்ள இந்த சித்த மருத்துவமனைகள் புத்துயிர் பெறத் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக 46 முதல்நிலைக் கோயில்களில் சித்த மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன.கரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்றும் பொறுப்பில் அரசு இருப்பதால் டிசம்பருக்கு பின்பு அனைத்துக் கோயில்களிலும் சித்த மருத்துவமனைகள் அமைக்கஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.கோயில்களில் மருத்துவமனைகளைத் தொடங்க முறையான கட்டமைப்பு, பணியாளர்கள், உபகரணங்கள் இல்லை. ஆனால், அனைத்துக் கோயில்களிலும் கட்டிடங்கள் உள்ளன. அதனை மருத்துவமனைகளுக்கு ஏற்ப கட்டமைக்க வேண்டும்.
கரோனா சிகிச்சையில் அரசுதமிழ் மருத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. அதற்காக தனி சிகிச்சை மையங்களை உருவாக்கி அந்த மையங்களில் சிகிச்சைபெற்ற 100 வயது மூதாட்டி முதல்இளைஞர்கள் வரை குணமடைந்துள்ளனர்.

 

Tags :

Share via