சாத்தான்குளம்  ஜெயராஜ் , பென்னிக்ஸ் குடும்பத்தினரிடம் கனிமொழி எம்பி ஆறுதல்

by Editor / 22-06-2021 08:31:05pm
 சாத்தான்குளம்  ஜெயராஜ் , பென்னிக்ஸ் குடும்பத்தினரிடம் கனிமொழி எம்பி ஆறுதல்

 

சாத்தான்குளத்தில் கடந்த  ஆண்டு ஜூன் 19ஆம்தேதி  பொது முடக்கத்தை  மீறியதாக வியாபாரிகள்  ஜெயராஜ் , அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசார் கைது செய்து தாக்கி கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். காயமடைந்த ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ்  சிறையில் கடந்த ஜூன் 21ஆம்தேதி இரவும்,  மறுநாள் காலை ஜெயராஜ்  மரணமடைந்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து சிபிசிஐடி மற்றும் சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி அப்போதைய  காவல் ஆய்வாளர்  ஸ்ரீதர்,  உதவி ஆய்வாளர்கள்  ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், பாலதுரை உள்ளிட்ட 10பேர்களை கைது செய்து மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் கொரோனா தொற்று காரணமாக சப். இன்ஸ்பெக்டர் பால்துரை மரணமடைந்தார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட  காவல் ஆய்வாளர்  உள்ளிட்ட 9பேரும் சிறையில் உள்ளனர். 
இந்நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் முதலாண்டு நினைவு அஞ்சலி அவர்களது கடை அருகில் செவ்வாய்க்கிழமை  அனுஷ்டிக்கப்பட்டது. கடை முன்பு  அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கனிமொழி எம்பி, ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ கலந்து கொண்டு அவர்களது உருவ படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். இதைதொடர்ந்து கனிமொழி எம்பி, ஜெயராஜ் வீட்டிற்கு சென்று அவரது மனைவி செல்வராணி, மகள் பெர்சி உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை செய்யப்பட்டு ஓராண்டு முடிவடைந்துள்ளது.காவல் நிலையங்களில் தாக்கப்பட்டு உயிரிழப்பு சம்பவம்  ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.காவல் நிலையங்களில் மரணம் அடையக் கூடிய மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதற்காக தொடர்ந்து குரல் எழுப்பப்படுகிறது.அந்த வகையில் சாத்தான்குளத்தில் நடைபெற்ற இரட்டை கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இந்த வழக்கை கேரளாவுக்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டு உள்ளார்கள்.இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்த வழக்கு கேரளாவுக்கு மாற்றக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.அவர்களது குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க தமிழக முதல்வரின் ஆட்சி நிச்சயம் உறுதுணையாக இருக்கும் என்றார் அவர். 

 

Tags :

Share via