அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் செய்ய நீதிமன்றம் உத்தரவு

by Editor / 23-06-2021 04:14:19pm
அரசு பள்ளிகளில் கூடுதல்  ஆசிரியர்கள் நியமனம் செய்ய  நீதிமன்றம்  உத்தரவு

 

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் குறித்து உயர்நீதிமன்றம் பள்ளி கல்வித்துறைக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. நெல்லை ஹைக்கிரவுண்ட் மு.ந.அப்துல் ரஹ்மான் மேல்நிலைப்பள்ளி தாளாளர் முகமது நாசர்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் ஒன்றை செய்துள்ளார். 
அந்த மனுவில் கூறியதாவது எங்கள் பள்ளியில் 706 மாணவர்கள் பயில்கின்றனர். ஆனால் 18 ஆசிரியர்கள் மற்றும் 2 பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.2019ல் பள்ளி கல்வித்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7 முதல் 10 வகுப்புகளில் தமிழ் வழி பிரிவுக்கு இணையாக ஆங்கில வழி பிரிவு தொடங்க அனுமதி வழங்கியது. அதன்படி எங்கள் பள்ளியில் ஆங்கில வழி பிரிவு தொடங்கப்பட்டது. ஆங்கில வழிப்பிரிவுக்கு ஆசிரியர்கள் நியமிக்கவும், அறிவியல் ஆசிரியர் உபரியாக இருப்பதாக அறிவித்ததை ரத்து செய்யவும், பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக 3 ஆசிரியர்களை நியமிக்க அனுமதி கோரி முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்தோம்.
ஆனால் அவர் அந்த மனுவை நிராகரித்து உத்தரவிட்டார். எனவே நிறகடிப்பை ரத்து செய்து கூடுதலாக 3 ஆசிரியர்களை நியமிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து நீதிபதிகள் கூறியதாவது, பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் நியமனம் இருக்க வேண்டும்.
மாவட்ட பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை சரி செய்த பின்பே ஆசிரியர் நியமனத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்வது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

Tags :

Share via