ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நிறுத்தம் பிரதமர் மோடி

by Staff / 15-11-2022 03:10:02pm
ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நிறுத்தம் பிரதமர் மோடி

இந்தோனேசிய நாட்டின் பாலி தீவில் உள்ள நூசா துவாவில், ஜி-20 உச்சி மாநாடு இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு விமானத்தில் சென்றார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தோனேசிய பிரதமர் ஜோகோ விடோடோ விமான நிலையத்திற்கு வந்து பிரதமர் மோடியை வரவேற்றார்.
 
ஜி-20 உச்சி மாநாடு இன்று நூசா துவாவில் நடைபெற்று வருகிறது. மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, “உக்ரைனில் அமைதி திரும்புவதற்கு போர் நிறுத்தமும், ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தையும் மட்டுமே உரிய தீர்வாக அமையும். இந்த உலகம் முழுவதும் ஒன்றிணைந்து அதற்கான வழியை அமைக்க வேண்டும். இதை மீண்டும் மீண்டும் நான் வலியுறுத்திக் கொண்டே வருகிறேன். உலகில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த, நாம் கூட்டு உறுதியைக் காட்டுவது காலத்தின் தேவை. புத்தர் மற்றும் காந்தியின் புனித பூமியில் அடுத்த ஆண்டு ஜி-20 உச்சி மாநாடு நடைபெறும் போது, உலக அமைதிக்கான வலுவான செய்தியை, மக்களுக்கு தெரிவிக்க நாம் அனைவரும் உடன்படுவோம் என்று நம்புகிறேன்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், அப்போதைய உலகத் தலைவர்கள் அமைதிப் பாதைக்கு திரும்ப பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர். இப்போது இது நமக்கான நேரம். நமக்கான வாய்ப்பு. உக்ரைனில் அமைதி திரும்புவதற்கான வழியை நாம் ஏற்படுத்தித் தர வேண்டும். கொரோனா காலத்திற்குப் பின்னர், ஒரு புதிய உலகை உருவாக்கும் பொறுப்பு நமது தோள்களில் உள்ளது. காலநிலை மாற்றம், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரைனின் முன்னேற்றங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய உலகளாவிய பிரச்னைகளைக் கையாள்வதில் ஐ.நா போன்ற பலதரப்பு நிறுவனங்கள் தோல்வியுற்றன என்பதை G20 ஒப்புக்கொள்ளத் தயங்கக்கூடாது. அந்த நிறுவனங்களில் பொருத்தமான சீர்திருத்தங்களைச் செய்ய நாம் அனைவரும் தவறிவிட்டோம். எனவே, இன்று ஜி-20 மீது உலக மக்கள் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு நாட்டிலும், ஏழைக் குடிமக்கள் சந்திக்கும் சவால் மிகவும் கடுமையானது. அன்றாட வாழ்க்கை அவர்களுக்கு ஏற்கனவே ஒரு போராட்டமாக இருந்தது. கொரோனா காலத்தில் இந்தியா, தனது 1.3 பில்லியன் குடிமக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தது. தேவைப்படும் பல நாடுகளுக்கு உணவு தானியங்களையும் வழங்கியது. இருப்பினும், தற்போதுள்ள உரத் தட்டுப்பாடு, உணவுப் பாதுகாப்புக்கு ஒரு பெரிய நெருக்கடி. இந்தியா இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது. நிலையான உணவுப் பாதுகாப்பிற்காக தினை போன்ற பாரம்பரிய தானியங்களை மீண்டும் பிரபலப்படுத்துகிறது. ஊட்டச்சத்து குறைபாட்டையும், பசியையும் தினைகளால் தீர்க்க முடியும். அடுத்த ஆண்டு நாம் அனைவரும் சர்வதேச தினை ஆண்டை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும்.

சுத்தமான எரிசக்தி, சுத்தமான சுற்றுச்சூழல் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு உலக வளர்ச்சிக்கு முக்கியமானது. ஏனெனில் இந்தியா இப்போது வேகமாக வளரும் பொருளாதார நாடாக இருக்கிறது. ஆகையால் இந்தியாவுக்கு எரிசக்தி கிடைப்பதைத் தடுக்கும், எரிசக்தி ஸ்திரத்தன்மையை அசைக்கும் எவ்வித தடைகளையும் ஊக்குவிக்கக் கூடாது. 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பாதி மின்சாரம் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via