டிஜிட்டல் மயமாகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை
தமிழ்நாடு சட்டப்பேரவை விரைவில் காகிதமில்லா சட்டப்பேரவையாக, மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுவரை காகிதங்களின் மூலமே, அலுவலகப் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காகித பயன்பாட்டை முற்றிலும் கைவிட்டு, விரைவில் தமிழ்நாடு சட்டப்பேரவை டிஜிட்டல் மயமாகவுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
மின் ஆளுமை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வைஃபை, ப்ளூடூத் வசதியுடன் கூடிய டேப்லட்கள், 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம், நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவை நிகழ்வுகள் மற்றும் சட்ட முன்வடிவு ஆவணங்கள் என அனைத்தும் டேப்லட் மூலம் அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இ-சட்டப்பேரவை முறை, அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே அறிமுகமாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரவை நிகழ்வுகளை, ஒரே இணையதளப் பக்கத்தில் கொண்டுவரும் நோக்கில், மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம், 'நேஷனல் இ-விதான்-நேவா' அதாவது 'காகிதமில்லா சட்டப்பேரவை' திட்டத்தைக் கொண்டு வந்தது. இதற்காக கடந்த 2019 ஆம் வருடம், தமிழக சட்டப்பேரவை செயலக அலுவலர்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags :