ஆதார் இணைப்பிற்கு சிறப்பு மையம் – மின்சார வாரியம் அறிவிப்பு

by Editor / 25-11-2022 09:51:53am
ஆதார் இணைப்பிற்கு சிறப்பு மையம்  – மின்சார வாரியம் அறிவிப்பு

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்திருந்தது. இதனையடுத்து, ஆதாரை இணைத்தால்தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்ற நிலையை ரத்து செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்றும், மின்சார வாரியத்தின் அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், ஆதார் இணைப்புக்குப் பிறகே மின் கட்டணம் வசூலிக்க உள்ளதாகவும், இதன்மூலம் நுகர்வோர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் 2 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என்றும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து, அதை சரிபார்த்த பிறகே இணையவழியிலும், நேரடியாகவும் மின் கட்டணத்தை வசூலிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் மின் கட்டணம் செலுத்துவதற்கு, நவம்பர் 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இறுதி நாள் உள்ள தாழ்வழுத்தப் பிரிவு மின்நுகர்வோர் அனைவருக்கும் 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்கப்படும்.

ஆதார் இணைக்காமல் உள்ள நுகர்வோருக்கு மட்டுமே இவ்வாறு அவகாசம் வழங்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் ஆதார் இணைப்புக்குப் பிறகு, எவ்வித கூடுதல் கட்டணமுமின்றி மின் கட்டணத்தை செலுத்த முடியும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான தகவல்களை, மின் கட்டண வசூல் மையங்கள் வாயிலாக நுகர்வோருக்கு தெரிவிக்க வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆதார் இணைப்பிற்கு சிறப்பு மையம்  – மின்சார வாரியம் அறிவிப்பு
 

Tags : ஆதார் இணைப்பிற்கு சிறப்பு மையம்

Share via