பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட சுவாதி

by Editor / 25-11-2022 09:59:10am
 பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட சுவாதி

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததாக கூறி, கடந்த 2015-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இதுதொடர்பான விசாரணையின் போது, நீதித்துறையின் மனசாட்சியை திருப்திப்படுத்தும் வகையில் சுவாதியை மீண்டும் சாட்சியாக விசாரிக்க விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இது கட்டாயத் தேவை எனவும், தவறும்பட்சத்தில் நீதித்துறையின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிடும் என தோன்றுவதாகவும் குறிப்பிட்டனர்.

மேலும், கீழமை நீதிமன்றம் இதை பெரிய அளவில் எடுத்துக் கொள்ளாமல் சுவாதியின் சாட்சியை நிராகரித்துள்ளது என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மேல்முறையீட்டு நீதிமன்றம், துறவிகளைப் போல தவறுக்கு எதிராக சமநிலையை பேண இயலாது எனவும் தெரிவித்தனர்.

எனவே, கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதி, நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராக உத்தரவிட்டனர். மேலும், சுவாதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் போதிய பாதுகாப்பு வழங்க நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 

 

Tags : கோகுல்ராஜ் கொலை வழக்கின் விசாரணை

Share via