சட்டசபை பொது கணக்கு குழுவின்  தலைவராக செல்வபெருந்தகை,மதிப்பீட்டு குழு தலைவராக  டி.ஆர்.பி.ராஜா;  நியமனம்

by Editor / 25-06-2021 08:00:57pm
சட்டசபை பொது கணக்கு குழுவின்  தலைவராக செல்வபெருந்தகை,மதிப்பீட்டு குழு தலைவராக  டி.ஆர்.பி.ராஜா;  நியமனம்

 

சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் பதவி அ.தி.மு.க.வுக்கு வழங்கப்படாமல் தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்பொறுப்பில் செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டசபை பொது கணக்கு குழு தலைவராக எதிர்க்கட்சி தலைவர் நியமிக்கப்படுவது வழக்கம். கடந்த 2016ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அதிக எம்.எல்.ஏ.க்களை பெற்று பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க.வுக்கு பொது கணக்கு குழு தலைவர் பதவியை வழங்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதா விரும்பவில்லை.
எனவே அந்தப் பதவியை சட்டசபை காங். தலைவராக இருந்த ராமசாமிக்கு வழங்கினர். இதற்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது.ஜெ. மறைவுக்கு பின் நிலைமை மாறியது. அ.தி.மு.க. - தி.மு.க. இடையே புரிதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 2018ல் பொது கணக்கு குழு தலைவராக எதிர்க்கட்சி துணை தலைவராக இருந்த துரைமுருகன் நியமிக்கப்பட்டார்.
கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அ.தி.மு.க. 66 எம்.எல்.ஏ.க்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. இம்முறை பொது கணக்கு குழு தலைவர் பதவி அ.தி.மு.க.வுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அ.தி.மு.க. பாணியில் காங். சட்டசபை தலைவர் பதவியை செல்வப்பெருந்தகைக்கு தி.மு.க. வழங்கி உள்ளது.
சட்டசபையில்  பல்வேறு குழுக்களுக்கு போட்டியின்றி தேர்வான உறுப்பினர்கள் மற்றும் குழு தலைவர்கள் பெயரை சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
மதிப்பீட்டு குழு தலைவராக தி.மு.க. - எம்.எல்.ஏ. - டி.ஆர்.பி.ராஜா; பொது நிறுவனங்கள் குழு தலைவராக தி.மு.க. - எம்.எல்.ஏ. - எஸ்.ஆர்.ராஜா; அவை உரிமைக்குழு தலைவராக துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via