கனிம வள லாரி மோதி ஓய்வு பெற்ற நடத்துனர் பலி - தொடரும் விபத்துகளால் பொதுமக்கள் அச்சம்.
தென்காசி மாவட்டம், கீழப்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராமர் (வயது 62) ஓய்வு பெற்ற நடத்துனரான இவர் தற்போது மேலகரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், இன்றைய தினம் தனது உறவினர்களை பார்ப்பதற்காக சொந்த ஊரான கீழப்புதூர் பகுதிக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில், உறவினர்களை சந்தித்து விட்டு மேலகரம் பகுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, செங்கோட்டை அருகே திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது அவர் மோட்டார் சைக்கிளின் பின்னால் வேகமாக வந்த கனிம வள லாரி ஒன்று ராமர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ராமர் சம்பவ இடத்திலே பலியாகிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த செங்கோட்டை போலீசார் ராமரின் உடலை மிட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த செங்கோட்டை போலீசார் லாரியின் ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் சமீப காலமாக கனிம வள லாரிகளால் தொடர் விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் அதிக அளவில் ஏற்பட்டு வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாளுக்கு நாள் கனிம வள லாரிகளால் அரங்கேற்றப்படும் விபத்துக்களால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : கனிம வள லாரி மோதி ஓய்வு பெற்ற நடத்துனர் பலி - தொடரும் விபத்துகளால் பொதுமக்கள் அச்சம்.