வன்னியர் உள் ஒதுக்கீடுப் போராட்டம்:  35,554 பேர் மீது வழக்கு

by Editor / 26-06-2021 05:03:02pm
வன்னியர் உள் ஒதுக்கீடுப் போராட்டம்:  35,554 பேர் மீது வழக்கு


மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில், வன்னிய குல சத்திரியர்களுக்கு 20 விழுக்காடு ஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி, வன்னியர் சங்கத்தினர் கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அப்போது, ரயில் மீது கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், பெருங்களத்தூரில் நடைபெற்ற ரயில் மறியல் மற்றும் சாலை மறியலில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய மக்கள் மன்றத்தின் தலைவர் வாராகி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் தமிழ்நாடு டிஜிபி சார்பில் உதவி ஐஜி அர.அருளரசு தாக்கல் செய்த பதில்மனுவில், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விதிமீறி ஒன்று கூடுவது, ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாது என தலைமைச் செயலாளர் பிறப்பித்திருந்த உத்தரவின் அடிப்படையில், அனைத்து மாவட்ட எஸ்.பி.-க்களும், மாநகரங்களின் காவல் ஆணையர்களும் நடவடிக்கை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்க தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்ட மசோதாவை தற்காலிக ஏற்பாடாக தமிழ்நாடு அரசு கொண்டு வந்த பின் பாமக, வன்னியர் சங்கம் ஆகியவைப் போராட்டங்களை நிறுத்தி உள்ளதாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டங்களில் ஈடுபட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 35 ஆயிரத்து 554 பேர் மீது தமிழ்நாடு முழுவதும் 204 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகக் கூறி, மாவட்ட மற்றும் மாநகர வாரியான விவரங்களும் பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை டிஜிபி எடுத்து வருவதால், வாராகி தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென பதில்மனுவில் கோரப்பட்டுள்ளது.இந்த வழக்குத் தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

 

Tags :

Share via