27 மாவட்டங்களில் 9,333 அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்
போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் விடுத்துள்ள அறிக்கையில், முதல்வர் ஸ்டாலின், கொவைட்-19 நோய்த் தொற்றின் காரணமாக அமலில் உள்ள, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினை, 28.06.2021 முதல் 05.07.2021 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்கள். இந்த உத்தரவில், வகை 2-ல் குறிப்பிட்டுள்ளவாறு, அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கிடையேயும் பொதுப் பேருந்து போக்குவரத்தினை, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமல், 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளித்துள்ளார்.
ஏற்கனவே, முதல்வர், வகை 3-ல் குறிப்பிட்டுள்ளவாறு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கிடையே பொதுப் பேருந்து போக்குவரத்தினை, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமல், 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளித்து தற்போது இயக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், ஏற்கனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன், கூடுதலாக 23 மாவட்டங்கள் என ஆகமொத்தம் 27 மாவட்டங்களில், வரும் 28.06.2021 காலை 6.00 மணி முதல், 50 சதவிகித இருக்கைகளுடன்,பஸ்கள் இயங்கும் என தெரிவித்துள்ளார்.
Tags :



















