தமிழகத்தில்13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.

by Editor / 06-12-2022 08:00:43am
தமிழகத்தில்13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று 6ஆம் தேதி மாலை தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். தொடர்ந்து, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து டிசம்பர் 8ஆம் தேதி காலை வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் அருகில் வந்தடையக்கூடும். மேலும், இன்று தமிழகம், புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

வரும் 8ஆம் தேதி, தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமாக மழை பெய்யக்கூடும்.

கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்சம் 31-32 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்ஷியஸ் அளவில் பதிவாகும்.

அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 55-65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால், வரும் 9ஆம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via

More stories

Logo