நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
நாடாளுமன்றத்தில் இன்று முதல் வரும் டிசம்பர் 29ம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க டெல்லியில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட கட்சிகள் கலந்துகொண்டன.
17 அமர்வுகளாக நடைபெறும் இந்த கூட்டத்தொடரில், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று அக்கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சீன-இந்திய எல்லையில் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து மத்திய அரசு இதுவரை தெளிவான விளக்கம் தரவில்லை என கூறினார். மேலும், காஷ்மீர் பண்டிட்டுகள் விவகாரம் குறித்து கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
பின்னர் பேட்டியளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ஆக்கபூர்வமான விவாதத்திற்கு அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தார். இந்த கூட்டத்தொடரில் இட ஒதுக்கீடு, பெட்ரோல், டீசல் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
Tags :