வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே முழுமையாக கரையை கடந்தது.

by Editor / 10-12-2022 08:55:39am
 வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே முழுமையாக கரையை கடந்தது.

 தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறியது. அதற்கு மாண்டஸ் எனப் பெயரிடப்பட்டது. முதலில் தீவிர புயலாக இருந்த மாண்டஸ் பின்னர் புயலாக மாறி வடக்கு கடலோர பகுதியை நோக்கி நகர்ந்தது. புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே டிசம்பர் 9ந்தேதி இரவு முதல் 10ந்தேதி அதிகாலை வரை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இரவு சுமார் 9.45 மணி அளவில் மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி கரையை கடக்க தொடங்கியது. முதலில் வெளிப்புறப் பகுதி பின்னர் மையப்பகுதி அதன் பின்னர் வால் பகுதி என மூன்று கட்டங்களாக மாண்டஸ் புயல் கரையை கடந்தது.

இன்று அதிகாலை சுமார் 3.15 மணி அளவில் மாண்டஸ் புயல் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே முழுமையாக கரையை கடந்து முடிந்தது. சுமார் ஐந்தரை மணி நேரமாக இந்த கரையை கடக்கும் நிகழ்வு நடந்தது. புயலின் மையப் பகுதி கரையை கடக்கும்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது. சென்னையில் அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ வேகம் வரை காற்று வீசியதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் கூறின. புயல் கரையை கடந்து முடிந்துள்ள நிலையில் இனிப்படியாக வலுவிழக்கும் என்றும், முதலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவிழக்கும் என தென்மண்டல ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

Tags :

Share via