முன்னாள் எம்.பி.சசிகலா புஷ்பா-வின் வீடு-கார் மீது மர்மக்கும்பல் தாக்குதல்-பதட்டம்

by Editor / 22-12-2022 08:15:46pm
முன்னாள் எம்.பி.சசிகலா புஷ்பா-வின் வீடு-கார் மீது  மர்மக்கும்பல் தாக்குதல்-பதட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி முன்னாள் மேயராகவும், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான  பாஜகவின் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா-வின் தூத்துக்குடி இல்லத்தில் மர்ம கும்பல்கள் வீடு புகுந்து நடத்திய தாக்குதல்களில்  அவரது கார் மற்றும் வீடுகளில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளும் பெரும் சேதம் ஏற்பட்டது.

இந்த தாக்குதல் அறிந்த பாஜக தொண்டர்கள் நிர்வாகிகள் பெரும் திரளானோர் தற்போது சசிகலா புஷ்பா இல்லம் முன்பு குவிந்துள்ளனர்.சம்பவம் நடந்த இடத்திற்கு அதிரடி போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று (21.12.2022) பாஜக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் கூட்டத்தில் பேசிய சசிகலா புஷ்பா,பேசும்போது:

அமைச்சர் கீதா ஜீவன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையான விமர்சித்திருந்தார். அமைச்சர்களை பற்றி பொய் பேசுவதை அண்ணாமலை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும், இல்லை என்றால் மேடையில் ஏறுவோம் என்று பேசி இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த சசிகலா புஷ்பா, நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் போது கால் இருக்காது, அண்ணாமலை பற்றி பேசும் நாக்கு இருக்காது என்று ஆவேசமாக சாடினார்.

தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் செய்யும் ஊழலை வெளிக் கொண்டு வருவோம். சமூக நலத்துறை அமைச்சராய் இருந்து சமூகத்தை பேணவில்லை. நாகரிக அரசியல் செய்ய வேண்டும். தெற்கத்தி பெண்களுக்கு அசிங்கத்தை ஏற்படுத்தி வருகிறீர்கள். தூத்துக்குடியில் மாற்றம் வர போகிறது. கீதாஜீவன் அமைச்சராக இருக்கும்போது இங்கு திமுக தோற்க போகிறது. இதே தூத்துக்குடியில் பாஜக வெற்றி பெற போகிறது என்று தெரிவித்தார்.இதன் தொடர்ச்சியாக 

இன்று தூத்துக்குடியில் உள்ள சசிகலா புஷ்பாவின் இல்லத்தில் மர்ம கும்பல்  திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால் வீட்டில் உள்ள ஜன்னல்கள், கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. அவரது காரும் சேதப்படுத்தப்பட்டன. இந்த தாக்குதல் சம்பவம் தூத்துக்குடியில் காட்டு தீ போல் பரவியது.

இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாஜகவின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் சசிகலா புஷ்பா இல்லத்தின் முன்பு குவிந்தர். பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் மீது பாரபட்சின்றி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் எனவும், காலதாமதம் ஏற்படுத்தினால் பல்வேறு போராட்டங்கள் நடத்த போவதாகவும் தமிழகம் முழுவதும் பாஜகவினர் இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகவும் சசிகலாபுஷ்பாவிற்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் பாஜக தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

இச்சம்பவத்தால் தூத்துக்குடியில் திமுக -பாஜகவினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தூத்துக்குடி நகர் முழுவதும் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

பாஜக அலுவலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வீடுகளுக்கும் திமுக முக்கிய நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னாள் எம்.பி.சசிகலா புஷ்பா-வின் வீடு-கார் மீது  மர்மக்கும்பல் தாக்குதல்-பதட்டம்
 

Tags : முன்னாள் எம்.பி.சசிகலா புஷ்பா-வின் வீடு-கார் மீது மர்மக்கும்பல் தாக்குதல்-பதட்டம்

Share via

More stories