திமுக முன்னாள்எம்.பி. மஸ்தான் கொலை5 பேர் கைது.

by Editor / 30-12-2022 08:36:25pm
திமுக முன்னாள்எம்.பி. மஸ்தான் கொலை5 பேர் கைது.

செங்கல்பட்டு: திமுக முன்னாள் எம்.பி மஸ்தான் மரண வழக்கில் திடீர் திருப்பமாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி, கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் உறரிஸ் ஷானவாஸ் என்பவர் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது தந்தையும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான மஸ்தான், தற்போது தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தில் துணைத் தலைவராக இருப்பதாகவும், அவர் தனது சித்தப்பாவின் மருமகன் இம்ரான் பாஷாவுடன் டிசம்பர் 21 ஆம் தேதி காரில் செங்கல்பட்டுக்குச் சென்றதாகவும்,அப்போது தந்தை மஸ்தானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில்,  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மஸ்தான் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்ததாகவும் மேலும் தந்தை மஸ்தானின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்த உறரிஸ் ஷானவாஸ், பிரேத பரிசோதனை செய்து விசாரிக்க வேண்டும் என்றும் தனது புகாரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து கூடுவாஞ்சேரி போலீசார், இந்த வழக்கை இயற்கைக்கு மாறான இறப்பு வழக்காக பதிவு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மஸ்தான், மூச்சுத்திணறல் காரணமாகவே உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்ததையடுத்து, இம்ரான் பாஷாவின் நடவடிக்கைகளை தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதையடுத்து நடைபெற்ற விசாரணையின் போது இம்ரான் பாஷாவின் வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக இருந்தன. மஸ்தான் உயிரிழந்த தினத்தன்று, அவர் வந்த காரில் இம்ரான் பாஷா தவிர, மேலும் இரண்டு நபர்கள் வழியில் சேர்ந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து இம்ரான் பாஷாவை காவல் நிலையத்திற்கு அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தனது சித்தி மகன் தமீம் என்கிற சுல்தான் அகமது மற்றும் அவரது நண்பர்கள் நஷீர், தௌபிக் அகமது, லோகேஷ்வரன் ஆகியோருடன் சேர்ந்து திட்டம் தீட்டி, மஸ்தானை கொலை செய்ததாக ஒப்பு கொண்டார். மஸ்தான், தனக்கு கடனாக கொடுத்த ரூ.15 லட்சம் பணத்தை திரும்பக் கேட்டு தொந்தரவு செய்ததால் அவரை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக இம்ரான் பாஷா வாக்குமூலம் அளித்தார்.

பைனான்சியரிடம் பணம் பெறப்போவதாக கூறி நம்பவைத்து மஸ்தானை செங்கல்பட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும், வழியில் தனது நண்பர்கள் உதவியுடன், மஸ்தானின் மூக்கு மற்றும் வாயை அழுத்திப் பிடித்து அவருக்கு முச்சுத்திணறல் ஏற்படுத்தி கொலை செய்ததாகவும், இம்ரான் பாஷா வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து வழக்கில் சம்மந்தப்பட்ட இம்ரான் பாஷா, தமீம் என்கிற சுல்தான், நஷீர், தௌபிக் அகமது மற்றும் லோகேஷ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் டாக்டர் மஸ்தானை கொலை செய்ய பயன்படுத்திய கார் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via