இரண்டரை வயது சிறுமி கோமா நிலையில் மருத்துவமனையில் உயிரிழப்பு
ஆலங்குளம் அண்ணாநகர் 3 வது தெருவில் சென்னை பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்ற திலீப் குமார், ஹேமலதா ஆகியோர் ஹாசினி என்ற இரண்டரை வயது பெண் குழந்தையுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தனர். சக்திவேல் ஆலங்குளத்தில் உள்ள காய்கனிச் சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகவும் ஹேமலதா ஆலங்குளம் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள தனியார் ஜவுளிக் கடையிலும் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் குழந்தை ஹாசினி கடந்த டிச. 31 ஆம் தேதி வீட்டில் தவறி விழுந்ததாகக் கூறி பலத்த காயத்துடன் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர்.
குழந்தை சுய நினைவின்றி காணப்பட்டதால் அங்கு முதலுதவிக்குப் பின்னர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 4 தினங்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. குழந்தை காயமான காரணம் குறித்து ஆலங்குளம் போலீசார் விசாரனை துவங்கினர். இது அறிந்த குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்த பெற்றோர் இருவரும் குழந்தை இறக்கும் முன் தினம் தலைமறைவாகினர். ஆலங்குளம் போலீசார் மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தை உண்மையிலேயே இவர்கள் இருவரின் குழந்தை தானா? இவர்கள் அளித்த பெயர் விவரங்கள் உண்மைதானா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருவரின் தலைமறைவால் குழந்தையின் சாவில் சந்தேகம் அதிகரித்துள்ளது.
Tags :