ஆளுநரை அவதூறாக பேசிய நபரை நீக்கியது  திமுக தலைமை.

by Editor / 14-01-2023 10:07:30pm
ஆளுநரை அவதூறாக பேசிய நபரை நீக்கியது  திமுக தலைமை.

சட்டப்பேரவையில் நடைபெற்ற ஆளுநர் உரையின் போது, தமிழக அரசு கொடுத்த உரையில் ஆளுநர் சில பகுதிகளை தவிர்த்துவிட்டதாக குற்றசாட்டு எழுந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் ஆங்காங்கே இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று திமுக சார்பில் சென்னை விருகம்பாக்கம் 128வது வட்டத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் மா. சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, ஆகியோர் கலந்து கொண்டனர்.

 பொதுக்கூட்டத்தில் திமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தமிழக ஆளுநரை பற்றி அருவருக்கத் தக்க வகையிலும், மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதுகுறித்து ஆளுநரின் துணைச் செயலாளர் பிரசன்னா ராமசாமி, சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அளித்தார். மேலும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திமுகவினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கி திமுக தலைமைக் கழகம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, திராவிட முன்னேற்றக் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஆளுநரை அவதூறாக பேசிய நபரை நீக்கியது  திமுக தலைமை.
 

Tags :

Share via