இன்று முதல் 7ம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல்.

by Editor / 31-01-2023 08:51:03am
இன்று முதல்  7ம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக கடந்த 4ம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் இன்னும் ஓரிரு தினங்களில் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை இன்று முதல் தினமும் காலை 10 மணி தொடங்கி பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்ரவரி மாதம் 7ம் தேதி கடைசி நாளாகும். தொடர்ந்து 8ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற பிப்ரவரி மாதம் 10ம் தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வருகிற 3ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். தே.மு.தி.க. வேட்பாளர் எஸ்.ஆனந்த் நாளை, அ.ம.மு.க. வேட்பாளர் சிவபிரசாந்த் 3ம் தேதியும் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள். பொதுப்பிரிவு வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை ரொக்கமாக மட்டுமே செலுத்த வேண்டும். வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது தேர்தல் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் வருகிற 27ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 2ம் தேதியும் நடைபெறுகிறது.

 

Tags :

Share via