உத்தரகாண்ட் புதிய முதலமைச்சராக புஷ்கர்சிங் தாமி தேர்வு
உத்தரகாண்ட் பாஜக அரசு நான்கு ஆண்டுகளை கடந்து ஐந்தாவது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது. உட்கட்சி குழப்பம் காரணமாக உத்தரகாண்ட் முதலமைச்சராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து தீரத் சிங் ராவத் முதலமைச்சராகப் பதவி ஏற்றார்.
தீரத் சிங் ராவத் நாடாளுமன்ற எம்.பியாகவும் உள்ளார்.
உத்தரகாண்ட் முதலமைச்சராகப் பதவி ஏற்ற நிலையில் அந்த மாநிலத்தில் வரும் செப்டம்பர் 10ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருந்தார்.ஆனால், கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புகள் இல்லை என்று கூறப்பட்டது. மேலும் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இடைத்தேர்தல் நடத்தத் தேவையில்லை என்றும் தேர்தல் ஆணையம் கருதுகிறது. எனவே, முதலமைச்சராக நீண்டகாலம் தொடரமுடியாத சூழல் ஏற்பட்டது.
மேலும் தனக்கு முன்பு பதவியில் இருந்த திரிவேந்திர சிங் அமல்படுத்திய திட்டங்களை பொதுவெளியில் கடுமையாக விமர்சனம் செய்தது பாஜகவுக்கும் பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டது. மேலும் கும்பமேளாவின் போது அதில் பங்கேற்பவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதற்கான பரிசோதனையும் நடத்த தேவையில்லை என்றும் தீரத் சிங் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர் அதிருப்தி காரணமாக தீரத் சிங் கடந்த சில நாட்களாக டெல்லியில் முகாமிட்டு உயர் மட்டத்தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பாஜக மேலிடம் கேட்டுக் கொண்டதை அடுத்து தீரத் சிங் ராவத் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
இதையடுத்துஉத்தரகாண்ட் புதிய முதலமைச்சராக புஷ்கர்சிங் தாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே முதல்வராக இருந்த தீரத் சிங் ராவத் பதவி விலகியதை தொடர்ந்து புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டார். பாஜக உட்கட்சி பூசலால் கடந்த 4 மாதங்களில் உத்த்ரகாண்ட்டுக்கு 3-வது முதலமைச்சராக புஷ்கர்சிங் தாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Tags :