சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி காலமானார்

எல்கர் பரிஷத்-மாவோயிஸ்டுகள் தொடர்புடைய வழக்கில் கைது செய்யப்பட்ட மனித உரிமை ஆர்வலர் பாதிரியார் ஸ்டேன் சுவாமி உயிரிழந்துவிட்டதாக அவருக்கு சிகிச்சையளித்த தனியார் மருத்துவமனை (Holy Family hospital) மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.எல்கர் பரிஷத் மாவோயிஸ்டுகள் வழக்கில் ஸ்டேன் சுவாமி கடந்தாண்டு அக்டோபர் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
தலோஜா சிறையில் இருந்த ஸ்டேன் சுவாமி கரோனா தொற்று மற்றும் பார்கின்சன் நோயினால் அவதிப்பட்டு வருவதால் மருத்துவ உதவி கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் மே 29 முதல் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில், ஸ்டேன் சுவாமியின் ஜாமீன் மனு மும்பை உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.அப்போது, திங்கள்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு ஸ்டேன் சுவாமி உயிரிழந்ததாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவமனை மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 84 வயதான இயேசு சபை பாதிரியார் ஸ்டேன் சுவாமி கடந்த 2020ம் ஆண்டு என்ஐஏ மூலம் ஜார்கண்டில் கைது செய்யப்பட்டார்.2018ல் பீமா - கொரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கார் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தியதாகவும் இவர் மீது வழக்கு உள்ளது.மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் இவர் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஆதிவாசி மற்றும் தலித் மக்களுக்கு இவர் சேவை செய்து வந்த போது தேசிய புலனாய்வு அமைப்பு மூலம் திடீரென கைது செய்யப்பட்டார்.
Tags :