14 ந்தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

by Editor / 06-07-2021 08:24:15pm
14 ந்தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேர்வழி இயக்கம் அறக்கட்டளை தாக்கல் செய்த மனுவில், கடந்த 2017-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, நமது நாட்டில், 23.8 சதவீத வீடுகளில் மட்டுமே இணைய தள இணைப்புகள் உள்ளது. 10.7 சதவீத வீடுகளில் மட்டும் கணினி வசதிகள் உள்ளது. 30 கோடி மக்களிடம் மட்டுமே ஸ்மார்ட் செல்லிடப்பேசிகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் அனைத்து மாணவர்களும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் வசதியை பெற்றிருக்கவில்லை.

பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி, பொறியியல், சட்டம், மருத்துவம், கட்டடக் கலை உள்ளிட்ட படிப்புகளை ஆன்லைன் மூலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பொதுமுடக்கம் காரணமாக, பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

எனவே, உயர்கல்வி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான கொள்கையை அமல்படுத்த வேண்டும். அனைத்து கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும். வகுப்புகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு, ஆகியவை ஜூலை 14-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

 

Tags :

Share via