மேகதாது அணை பிரச்சினை -துரைமுருகனிடம் மத்திய அமைச்சர் உறுதி

by Editor / 06-07-2021 08:26:21pm
மேகதாது அணை பிரச்சினை -துரைமுருகனிடம் மத்திய அமைச்சர் உறுதி

காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவது, மார்கண்டேய நதியில் அணை கட்டியது போன்ற விவகாரங்கள் தொடர்பாக டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத்தை இன்று அமைச்சர் துரைமுருகன் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி நதியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் வழங்கவில்லை. 8 டிஎம்சி அளவு தண்ணீரைக் கூட அவர்கள் வழங்குவதில்லை. எங்களுக்கு மாதா மாதம் சரியாக தண்ணீர் வழங்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன். உடனே இதுகுறித்துப் பேசுவதாக அவர் தெரிவித்தார்.
பின்னர் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா மேகதாது அணை கட்டும் விவகாரம் குறித்துப் பேசினேன். அப்போது கர்நாடகா அரசு காவிரி ஆற்றில் மேற்கொள்ளும் எந்த ஒரு திட்டத்திற்கும் தமிழ்நாட்டைக் கேட்டுதான் செய்ய வேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தேன்.
மேகதாது அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்புக்கு முன் எங்களிடம் அதுகுறித்து அறிவிக்கவில்லை. ஒப்புதலும் கேட்கவில்லை. நேரடியாக மத்திய அரசிடம் இதற்கு அனுமதி பெற்றிருக்கிறார்கள். இந்த விசயத்தில் மத்திய அரசின் அணுகுமுறை சரியானதாக இல்லை என்றேன்.
இதற்கு மத்திய அமைச்சர், ‘விரிவான திட்ட அறிக்கை பெற்றுவிட்டால் மட்டும் அணை கட்டிவிட முடியாது. தமிழ்நாட்டைக் கேட்காமல் நாங்கள் மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்க மாட்டோம்’ என்று உறுதியளித்தார்.
அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அனுமதி பெறாமல் தென்பெண்ணை ஆற்றின் முக்கிய துணை நதியான மார்கண்டேய நதியில் கர்நாடக அரசு தன்னிச்சையாக அணையைக் கட்டியுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் இன்றளவில் அது அமைக்கப்படவில்லை. இதற்கு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அந்தக் கோரிக்கையை ஏற்ற மத்திய அமைச்சர் நடுவர் மன்றம் அமைக்க உத்தரவு பிறப்பிப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தரத் தலைவரை நியக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய அமைச்சர், அதற்கு ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்தார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். பின்னர் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை நாங்களே செய்கிறோம். இதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தேன். இதனை ஏற்ற மத்திய அமைச்சர், இதுபற்றி பேசுவதாகத் தெரிவித்தார்.
இந்தத் தண்ணீர் விவகாரங்கள் தொடர்பாக அனைத்து விவரங்களையும் அவர் முழுமையாகத் தெரிந்து வைத்துள்ளார். அவருடனான சந்திப்பு எனக்கு மகிழ்ச்சி அளித்தது.இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

 

Tags :

Share via