300 ரூபாய் சிலிண்டர் மானியம்: முதல்வர் அறிவிப்பு

by Staff / 13-03-2023 02:09:47pm
300 ரூபாய் சிலிண்டர் மானியம்: முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தின் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தொகையான ரூ. 11, 600 கோடியை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். மேலும் புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் 300 ரூபாய் மானியமாக வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 15-வது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9-ம் தேதி துணை நிலை ஆளுநர் தமிழிசை உரையுடன் தொடங்கியது, தொடர்ந்து நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி ரூ. 11, 600 கோடிக்கான பட்ஜெட்டை இன்று பேரவையில் தாக்கல் செய்தார்.பட்ஜெட்டில் வரவு செலவு குறித்தான திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் ரங்கசாமி, பல்வேறு புதிய திட்டங்களையும் அறிவித்துள்ளார்.அதில் புதுச்சேரியில் கல்வி தரத்தை மேலும் உயர்த்தும் வகையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும் எனவும், 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்,புதுச்சேரி துறைமுகத்தில் வணிக ரீதியான சரக்குகள் கையாளுவதற்கு உண்டான வசதிகள் மேம்படுத்தப்படும், விமான நிலையம் மேம்படுத்தும் என தெரிவித்த அவர், வயது மூக்கின் காரணமாக மீனவ முதியோர்களின் சமூக உரிமையை மேலும் பாதுகாக்க 70 வயதிலிருந்து 79 வயது வரை உள்ள மீனவர்களுக்கு தற்போது வழங்கப்படும் 3, 000 உதவித்தொகையை 3500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும், பெண் குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரி மாநிலத்தை சார்ந்தவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் குழந்தை பிறந்தவுடன் 50 ஆயிரம் ரூபாய் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 18 வருட காலத்திற்கு நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தப்படும் என தெரிவித்தார்,மேலும் புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப உணவு பங்கிட்டு அட்டைதாரர்களும் பயன்பெறும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் 300 ரூபாய் வீதம் வருடத்திற்கு மொத்தம் 12 சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும் என்றும் இதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 126 கோடி ரூபாய் செலவாகும் எனவும் தெரிவித்தார்.புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் உள்ளூர் பேருந்துகளில் அட்டவணை இன பெண்கள் இலவசமாக பயணம் செய்ய வழிவகை செய்யப்படும் எனவும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவிப்பை வெளியிட்டார்.

 

Tags :

Share via