சாம்சங் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் சித்திரையூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் கடந்த 25.04.22 ல் திருவாரூர் தெற்கு வீதியில் உள்ளதனியார் மொபைல் கடையில் 15 ஆயிரத்து 604 ரூபாய்க்கு சாம்சங் கேலக்ஸி ஏ12 என்கிற ஆண்ட்ராய்ட் மொபைலை வாங்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த 06.05.2022ல் அந்த மொபைல் போனில் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக போன் வாங்கியதில் இருந்து அதீத வெப்பம் ஏற்படுவதாகவும் கூகுள் குரோம் போன்ற செயலிகள் வேலை செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.இதனை அந்த நிறுவனத்திலும் தெரிவித்து 1018/ ரூபாய்க்கு சர்வீஸ் செய்துள்ளார்.இருப்பினும் அந்த மொபைல் போனில் உள்ள பிரச்சனைகள் சரியாகவில்லை என்று கூறப்படுகிறது.இதனையடுத்து செல்வகுமார் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இன்று நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி லட்சுமணன் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.அந்த தீர்ப்பில் மொபைல் போனுக்கான வாரண்டி இருக்கும்போது அதில் உள்ள பழுதை நீக்குவதற்கு பணம் பெற்றது நியாயமற்ற வர்த்தக நடைமுறை மற்றும் சேவை குறைபாடு என இந்த ஆணையம் கருதுகிறது.எனவே அந்த பழைய போனை எடுத்துக் கொண்டு போனுக்கான 15 ஆயிரத்து 604 ரூபாயை வழங்குவதுடன் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு இழப்பீடாக 10ஆயிரம் ரூபாயும் வழக்கு செலவு தொகையாக 5ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Tags : Consumer Grievance Commission verdict fines Samsung.