தமிழக பட்ஜெட் நாளைதாக்கல்-சலுகைகளுக்கு வாய்ப்பு. 

by Editor / 19-03-2023 09:25:24am
தமிழக பட்ஜெட் நாளைதாக்கல்-சலுகைகளுக்கு வாய்ப்பு. 

தமிழக சட்டபேரவையில்  தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நாளை காலை 10 மணிக்கு  தமிழக சட்டப்பேரவை கூடியதும்  2023-24-ம் ஆண்டுக்கான  பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. சட்டபேரவையில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பட்ஜெட் உரையை வாசிப்பார். அவர் வாசித்து முடிந்ததும் சட்டசபை ஒத்தி வைக்கப்படும். இதனையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்தக் கூட்டத்தில், சட்டசபை கூட்டத்தொடரை  எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? அதில் என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும்? என்பது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது. குறிப்பாக  வேளாண் பட்ஜெட் தாக்கல் உள்பட அனைத்து அலுவல்கள் குறித்தும் அந்தக் கூட்டத்தில்தான் முடிவு செய்யப்படும். இந்த கூட்டத்திற்கு பிறகு சட்டசபை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாகவும், மானிய கோரிக்கையின் தேதிகள் தொடர்பான  அறிவிப்பை சபாநாயகர் அப்பாவு வெளியிடுவார். இந்த பட்ஜெட்டில், பெண்களுக்கான உரிமைத் தொகையாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, அதனால் பயனடையும் பெண்கள் பற்றிய விவரங்கள் அப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via