தமிழக பா.ஜ.க புதிய தலைவர் அண்ணாமலை?: பதவியை பிடிக்க நயினார் நாகேந்திரன் தீவிரம் 

by Editor / 08-07-2021 04:23:41pm
தமிழக பா.ஜ.க புதிய தலைவர் அண்ணாமலை?: பதவியை பிடிக்க நயினார் நாகேந்திரன் தீவிரம் 

 

தமிழக பா.ஜ.கவின் அடுத்த தலைவராக அண்ணாமலை நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.
தமிழக பா.ஜ.கவின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன், 2019-ம் ஆண்டில் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து பா.ஜ.க தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். பா.ஜ.க தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டதிலிருந்து அவர், தமிழகத்தில் பா.ஜ.க வளர்ச்சிக்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.
கடவுள் முருகனை அவதூறாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் வேல் யாத்திரை அறிவித்தார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அண்ணா தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க தேர்தலை எதிர்கொண்டது. அண்ணா தி.மு.க. கூட்டணியில் 20 தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிட்டது. அதில், 4 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இந்தநிலையில், பிரதமர் மோடி மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்தார். அதில், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர், தற்போது மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ளார். பா.ஜ.க விதிமுறைகளின்படி மத்திய அமைச்சர், மாநில அமைச்சர் பதவிகளில் இருப்பவர்கள் கட்சித் தலைவர் பதவிகளில் இருக்கக் கூடாது. அதன்படி, பா.ஜ.க தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்வார். அதனையடுத்து, தமிழக பா.ஜ.கவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக பா.ஜ.கவைப் பொறுத்தவரை தற்போது 10 பேர் துணைத் தலைவர்களாக உள்ளனர்.
ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்து பா.ஜ.கவில் இணைந்து தற்போது துணைத் தலைவராக இருக்கும் அண்ணாமலை தமிழக அளவில் அனைவரும் அறிந்த ஒருவராக இருக்கிறார்.
கள அரசியல் அனுபவம் அவருக்கு பெரிதாக இல்லையென்றபோதும், சமூக அறிவியல் நல்ல அறிவைக் கொண்டவராக இருந்துவருகிறார். எனவே, அண்ணாமலைதான் அடுத்த தலைவராக நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளிவருகின்றன.அதே நேரத்தில் சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் பெயரும் பா.ஜ.க. தலைவர் பதவிக்கு பரிசிலிக்கப்படுகிறது.

 

Tags :

Share via