தருமபுரி அருகே கொலையில் முடிந்த மாந்திரீக விவகாரம் - நீதிமன்றத்தில் இருவர் சரண்.

by Editor / 07-04-2023 07:58:25am
தருமபுரி அருகே கொலையில் முடிந்த மாந்திரீக விவகாரம் - நீதிமன்றத்தில் இருவர் சரண்.

தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே வனப்பகுதியில் கொலையாகிக் கிடந்த நபரை போலீஸார் அடையாளம் கண்ட நிலையில், கொலை தொடர்பாக இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

பென்னாகரம் வனச்சரகத்தில் வனவராக பணியாற்றுபவர் புகழேந்திரன்(52). இவர் தலைமையிலான வனத்துறை குழுவினர் நேற்றுமுன்தினம்(புதன்) பேவனூர் காப்புக்காடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஏரியூர்-பென்னாகரம் சாலையையொட்டி சந்தைப்பேட்டை பகுதியில் மசக்கல் அருகே வனத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடப்பது தெரியவந்தது.

உடல் முழுக்க பல இடங்களில் பலத்த வெட்டுக் காயங்களுடன் கிடந்த இந்த சடலம் குறித்து ஏரியூர் காவல் நிலையத்துக்கு புகழேந்திரன் தகவல் அளித்தார். அதன்பேரில் போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையான நபர் யார் என்றும், கொலையாளிகள் குறித்தும் ஏரியூர் காவல் ஆய்வாளர் யுவராஜன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கொலையானவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த தனியார் நிறுவன பணியாளர் சசிக்குமார்(48) என்பது தெரிய வந்தது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் பணிக்காக ஓசூரில் தங்கியிருந்துள்ளார். மேலும், மாந்திரீக விவகாரங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு சசிக்குமார் மாயமானதாக அவரது குடும்பத்தார் ஓசூர் ஹட்கோ காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர் என்பன உள்ளிட்ட தகவல்களையும் விசாரணை மூலம் போலீஸார் அறிந்தனர். எனவே, மாந்திரீக விவகாரம் தொடர்பாக சசிக்குமாருடன் தொடர்பில் இருந்தவர்கள்ள் குறித்த விவரங்களை போலீஸார் சேகரிக்கத் தொடங்கினர்.

இதையறிந்து, கொலையாளிகளான ஓசூரைச் சேர்ந்த குணாளன், தினேஷ் ஆகிய இருவர் நேற்று(வியாழன்) மாலை பென்னாகரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சரணடைந்த இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தேவையான நடவடிக்கைகளில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்

 

Tags :

Share via