மாநகர பஸ் பணிமனைகளில் தனியார் ஓட்டுனர்கள் நியமனம்

by Staff / 07-04-2023 12:47:45pm
மாநகர பஸ் பணிமனைகளில் தனியார் ஓட்டுனர்கள் நியமனம்

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில், பேருந்துகளை இயக்குவது மட்டுமின்றி, வழித்தடத்தில் சென்று வந்த பேருந்துகளை பணிமனையில் நிறுத்துவது, டீசல் பிடித்துச் செல்வது உள்ளிட்ட பணிகளில், 500க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் பணியாற்றுகின்றனர். மாதச்சம்பளம்இந்நிலையில், பத்தாண்டுகளுக்கும் மேல் புதிதாக ஆள் எடுக்காதது, ஒவ்வொரு ஆண்டும் அதிக ஓட்டுனர்கள் ஓய்வுபெறுவது உள்ளிட்ட காரணங்களால், பேருந்துகளை இயக்க ஓட்டுனர் பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும், வெளி மண்டலங்களுக்கு மாற்றல் பணி பெற்றுச் சென்றோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த காரணங்களால், சென்னையில் அனைத்து பேருந்துகளையும் இயக்க முடியாத சூழல் உள்ளது. இதற்கு தீர்வாக, உள் பணி செய்யும் ஓட்டுனர்களை வழித்தடங்களுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. அதே நேரம், உள் பணிகளுக்கு, ஒப்பந்த அடிப்படையில் தனியார் ஓட்டுனர்களை நியமிக்க முடிவு செய்து, ஒப்பந்தம் விடப்பட்டது.

இதற்காக, தனியார் நிறுவனம் சார்பில் சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டி ஆள் சேர்க்கப்பட்டது. அவர்களுக்கு கடந்த வாரம், குரோம்பேட்டை பணிமனையில் ஓட்டுனர் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வானவர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அவர்களில் தேறிய 523 பேர், படிப்படியாக பணியில் சேர்ந்து வருகின்றனர்.இவர்களுக்கு, மாத சம்பளமாக 20 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் பூந்தமல்லியில் பணியில் சேர்ந்த நிலையில், இன்று ஆவடி பணிமனையில் ஓட்டுனர்கள் பணி ஏற்க உள்ளனர். இதைத் தொடர்ந்து அனைத்து பணிமனைகளிலும் தனியார் ஓட்டுனர்கள் பணி ஏற்க உள்ளனர். தனியார் நிறுவனத்தின் சார்பில், பணிமனைகள் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ஆறு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த பொறுப்பாளர்களே, அவர் பொறுப்பில் உள்ள பணிமனைகளுக்கு ஓட்டுனர்களை அனுப்புவர்.

பறிபோன மாற்றுப்பணிசென்னை மாநகர கழகத்தில் பணியாற்றும் ஓட்டுனர், நடத்துநர்கள், உடல் நல பாதிப்பு உள்ளோருக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டது. அந்த பணி, கடந்த மாதம் முதல் நிறுத்தப்பட்டது. இதனால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி, நேற்று முன்தினம், 15 ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன், சென்னை மாநகர போக்குவரத்துக் கழக தலைமையகமான பல்லவன் இல்லத்தில் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களிடம் பேச்சு நடத்திய மனிதவள மேம்பாட்டு அதிகாரி, ஏழு பேரை மட்டும், நேற்று மாற்றுப்பணிக்குத் திரும்பும் படியும், எட்டு பேரை மீண்டும் பேச்சுக்கு வரும்படியும் கூறினார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். அவர்கள் வீட்டுக்குச் சென்ற நிலையில், மாற்றுப்பணி உத்தரவை, மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாகம் ரத்து செய்தது. மாலையில் மாற்றுப்பணி வழங்கி, இரவில் அப்பணி பறிக்கப்பட்டதால், ஊழியர்கள் கவலையடைந்தனர்.

 

Tags :

Share via