அண்ணாமலை  48 மணி நேரத்திற்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் 

by Editor / 16-04-2023 07:11:38pm
அண்ணாமலை  48 மணி நேரத்திற்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 14ம் தேதி தனது கையில் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச்சின் பில்லை வெளியிட்டார். அதோடு திமுகவின் முக்கிய தலைவர்களின் சொத்துப்பட்டியலையும் வெளியிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். DMK Files என்ற தலைப்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மீதும், தி.மு.க. நிர்வாகிகள் மீதும் அவதூறான, உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி. நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், திமுக கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது, திமுகவின் இரண்டு கோடி உறுப்பினர்களில் ஒவ்வொருவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு சமம். இதனால் அமைப்புச் செயலாளர் என்ற முறையில், எங்கள் கட்சிக்காரர் உங்கள் மீது அவதூறுக்காக தகுந்த வழக்குத் தொடர உரிமை உண்டு.எனவே, திமுக மற்றும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பாக நான் கூறிக்கொள்வது: உங்கள் பேச்சு மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். உங்கள் சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் இணையதளத்தில் வெளியிட்ட வீடியோவை நீக்க வேண்டும்.

இழப்பீட்டுத் தொகையாக ரூ.500 கோடி (ரூபாய் ஐந்நூறு கோடிகள் மட்டும்) எங்கள் கட்சிக்காரருக்கு வழங்க வேண்டும். எங்கள் கட்சிக்காரர் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதை செலுத்த விரும்புகிறார்.

இந்த அறிவிப்பு கிடைத்து 48 மணி நேரத்துக்குள் இவற்றைச் செய்ய தவறினால், உங்களுக்கு எதிராகப் பொருத்தமான சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடங்குவதற்கு எங்கள் கட்சிக்காரர் முன்வருவார் என நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via