முதல்வர் ஸ்டாலின் கேஜ்ரிவாலுக்கு நன்றி

by Staff / 17-04-2023 02:18:24pm
முதல்வர் ஸ்டாலின்  கேஜ்ரிவாலுக்கு நன்றி

தமிழக பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலநிர்ணயம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த தீர்மானத்தை இணைத்து, பாஜக அல்லாத மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதில், இதேபோன்ற தீர்மானத்தை அந்தந்த மாநிலசட்டப்பேரவைகளிலும் நிறைவேற்றும்படி ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் எழுதிய கடிதத்தில், ‘மாநில சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்படும் சட்ட முன்வடிவுகளை ஆளுநர்கள் ஒப்புதல்அளிப்பதற்காக காலக்கெடுவை நிர்ணயிக்கக் கோரி, மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியதற்காக தமிழக சட்டப்பேரவையை நான் பாராட்டுகிறேன்.

அதே வழியில், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், தங்களின் அரசியல் சாசனப் பணிகளை மேற்கொள்ள காலக்கெடுவை நிர்ணயம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, வரும் கூட்டத் தொடரில் டெல்லி சட்டப்பேரவையில் நான் தீர்மானம் தாக்கல் செய்வேன்.மாநில, தேசிய தலைநகரப் பகுதி அரசுகளை சிறுமைப்படுத்த நினைக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் நாம் கூட்டாக எதிர்க்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூகவலைதளப் பதிவில், ‘‘தமிழக சட்ட்பபேரவையின் தீர்மானத்தைப் பாராட்டி, எங்கள் முயற்சியில் இணைந்து கொண்டதற்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு நன்றி. எந்த ஜனநாயகத்திலும் சட்டப்பேரவையின் இறையாண்மைதான் உச்சமானது.நியமனப் பதவியில் இருக்கும் ஆளுநர்கள், மக்களால் தேர்நதெடுக்கப்பட்ட அரசுகளின் சட்டமியற்றும் அதிகாரத்தையும், பொறுப்புகளையும் சிறுமைப்படுத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via