6-வது முறையாக விம்பிள்டன்  சாம்பியன் பட்டம் வென்றார் ஜோக்கோவிச்

by Editor / 12-07-2021 03:49:46pm
 6-வது முறையாக விம்பிள்டன்  சாம்பியன் பட்டம் வென்றார் ஜோக்கோவிச்

 


‘கிராண்ட்ஸ்லாம்’ விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் பெரேட்டினியை வீழ்த்தி செர்பிய வீரர் நோவாக் ஜோக்கோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் தொடர்ந்து 3-வது முறையாகப் பட்டத்தை வென்றுள்ள ஜோக்கோவிச் ஒட்டுமொத்தமாக 6-வதுமுறையாக விம்பிள்டனில் பட்டம் வென்றார்.
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் கடந்த 2 வார காலமாக நடந்து வந்தது.  ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 9-ம் நிலை வீரர் மாட்டியோ பெரேட்டினியுடன் (இத்தாலி) மோதினார். கிராண்ட்ஸ்லாமில் முதல்முறையாக இறுதிசுற்றை எட்டியவரான பெரேட்டினி தொடக்க செட்டில் ஜோகோவிச்சுக்கு கடும் நெருக்கடி கொடுத்ததுடன் அந்த செட்டை டைபிரேக்கர் வரை போராடி தனதாக்கினார். ஆனாலும், மிகுந்த அனுபவசாலியான ஜோகோவிச் ஆவேசமான ஷாட்டுகளால் பெரேட்டினியை மிரள வைத்து அடுத்த 3 செட்டுகளை தொடர்ச்சியாக கைப்பற்றி பெரேட்டினியின் சவாலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பெரேட்டினி 16 ஏஸ் சர்வீஸ்கள் வீசிய போதிலும் பந்தை வலுவாக வெளியே அடிக்கும் தவறுகளை அதிகமாக (48 முறை) செய்ததால் சறுக்கலை சந்திக்க நேரிட்டது.
3 மணி 24 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த மோதலில் ஜோகோவிச் 6 -7 (4 -7), 6- 4, 6- 4, 6 -3 என்ற செட் கணக்கில் பெரேட்டினியை தோற்கடித்து விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை 6-வது முறையாக உச்சிமுகர்ந்தார். ஏற்கனவே 2011, 2014, 2015, 2018, 2019-ம் ஆண்டுகளிலும் அவர் விம்பிள்டன் பட்டம் வென்றிருந்தார். அவருக்கு ரூ.17½ கோடியும், 2-வது இடம் பிடித்த பெரேட்டினிக்கு ரூ.9¼ கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
கடந்த 1969ம் ஆண்டில் ராட் லேவருக்குப்பின் 52 ஆண்டுகளில் முதல்முறையாக தொடர்ந்து 3 விம்பிள்டன் டென்னிஸ் பட்டங்களை ஜோக்கோவிச் மட்டுமே கைப்பற்றியுள்ளார். ஆடவர்க ளிடையே கிராண்ட்ஸ்லாம்களில் 30-வது முறையாக ஜோக்கோவிச் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார், பெடரர் 31 முறை தகுதி பெற்றுள்ளார். இந்த ஆண்டில் இதுவரை நடந்துள்ள 3 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் (ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன்) ஜோகோவிச்சே வாகை சூடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
34 வயதான ஜோகோவிச் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஆஸ்திரேலிய ஓபனில் 9 முறையும், பிரெஞ்சு ஓபனில் 2 முறையும், யு.எஸ்.ஓபனில் 3 முறையும் என மொத்தம் 20 கிராண்ட்ஸ்லாம்களை வென்றுள்ளார். இதற்கு முன் ஸ்விட்சர்லாந்து வீரர் பெடரல், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் ஆகிய இருவரும் 20 கிராண்ட்ஸ்லாம்களை வென்றிருந்தனர். அவர்களின் சாதனையை ஜோக்கோவிச் சமன் செய்துள்ளார்.

 

Tags :

Share via