பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை  திருவிழா துவங்கியது ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

by Editor / 12-07-2021 04:08:31pm
பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை  திருவிழா துவங்கியது ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து


ஒடிசாவில் உள்ள பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை திருவிழா  துவங்கியது. இதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஒடிசா மாநிலத்தின் கடற்கரை நகரான பூரியில் உள்ள ஜெகந்நாதர் கோவில் புகழ்பெற்றது. இங்கு மூலவர்களாக ஜெகந்நாதர் (பகவான் விஷ்ணு), அவரின் சகோதரர் பாலபத்திரர், சகோதரி தேவி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை உலக பிரசித்தி பெற்றது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த 3 மூலவர்களுக்குப் புதிய தேர் செய்யப்பட்டு, அதில் அவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள்.
45 அடி உயரமும், 35 அடி அகலமும் கொண்ட புதிய ரதங்களில் தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்படும் ஜெகந்நாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா ஆகியோர் 2 கி.மீ. தொலைவில் உள்ள தங்களின் அத்தை கோயிலான குண்டிச்சா கோவிலுக்கு செல்வார்கள். அங்கிருந்து 9-வது நாள் மீண்டும் புறப்பட்டு பூர்வீக இடத்துக்குத் திரும்புவார்கள்.
ஜெகந்நாதரின் தேர் 16 சக்கரங்களை கொண்ட சிவப்பு, மஞ்சள் நிற தேர் ஆகும். 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பலபத்திரர் எனப்படும் பலராமரும், 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிற தேரில் ஜெகந்நாதரின் தங்கையான சுபத்திரை தேவியும் நகர்வலம் வருவார்கள். தேரோடும் ரத்ன வீதியை பொன்னாலான துடைப்பத்தால் பூரி நகர மன்னர் கஜபதி சுத்தம் செய்வது வழக்கம்.
மிக நீண்ட தெருக்களில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களையும் இழுக்கும் வைபவம் படாதண்டா என்று அழைக்கப்படுகிறது. 10 நாட்கள் இந்தத் திருவிழா நடக்கும்.கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றை தவிர்க்கும் வகையில் பக்தர்கள் இன்றி ரத யாத்திரை திருவிழா நடந்தது.இந்த ஆண்டும் கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு ரத யாத்திரை திருவிழா பக்தர்கள் இன்றி தொடங்கியது. இதனை முன்னிட்டு 2 நாள் ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, வருகிற 13ந்தேதி இரவு 8 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும்.
தேர்களில் ஜெகந்நாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா மூலவர்களை எழுந்தருளச் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.முதலில் பாலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேரும் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகந்நாதர் எழுந்தருளிய தேர் புறப்பட்டது.இந்த ரத யாத்திரையில் பங்கேற்கும் கோவில் ஊழியர்களுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழும் இரு தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பதும் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. முன்னதாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் தொற்றில்லாத நபர்களுக்கே அனுமதி அளிக்கப்பட்டது. தேரோட்டத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்த ரத யாத்திரையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துகளை  தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஒடிசாவில் உள்ள அனைத்து பக்தர்கள் உள்பட நாட்டு மக்கள் அனைவருக்கும், ஜெகந்நாதர் ஆலய ரத யாத்திரை விழாவை முன்னிட்டு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
கடவுள் ஜெகந்நாதர் ஆசியால், நாட்டு மக்கள் அனைவரின் வாழ்வு முழுவதும் மகிழ்ச்சி, வளம் மற்றும் சுகாதாரம் ஆகியவை நிரம்பியிருக்கும் என தெரிவித்துள்ளார்.இதேபோன்று பிரதமர் மோடி டுவிட்டரில்  வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ரதயாத்திரை சிறப்பு தருணத்தில் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துகள். ஒவ்வொருவரின் வாழ்விலும் உடல்நலம் மற்றும் வளம் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும் என ஜெகந்நாதரை வணங்கி, வேண்டி கேட்டு கொள்வோம். ஜெய் ஜெகந்நாதர் என தெரிவித்து உள்ளார்.

 

Tags :

Share via