உத்தரபிரதேசத்தில் அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகள் 2 பேர் கைது

by Editor / 12-07-2021 04:15:22pm
உத்தரபிரதேசத்தில் அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகள் 2 பேர் கைது


சுதந்திர தினத்தன்று நாசவேலை நடத்த சதி செய்த அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகள் 2 பேர் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அமெரிக்க நகரங்கள் மீது விமானங்களை மோதி அதிபயங்கர தாக்குதல் நடத்திய அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற அமைப்பு, அன்சார் கஸ்வத்துல் ஹிந்த் ஆகும்.இந்த அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 2 பேர் உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.உத்தர பிரதேச மாநில கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. பிரசாந்த் குமார் லக்னோவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
லக்னோ உள்ளிட்ட மாநிலத்தின் பல நகரங்களில் வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று நாசவேலைகளை அரங்கேற்றுவதற்கு அன்சார் கஸ்வத்துல் ஹிந்த் அமைப்பைச் சேர்ந்த மின்ஹாஸ் அகமது, மசீருதீன் ஆகிய 2 பேர் சதித்திட்டம் தீட்டி வந்துள்ளனர். இவர்களை பயங்கரவாத தடுப்பு போலீஸ் படையினர், லக்னோவில் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இருவரும் அல்கொய்தா அமைப்பின் உத்தரபிரதேச மாநில அமைப்பின் தலைவரான உமர் ஹல்மண்டியின் கட்டளைப்படி சுதந்திர தினத்தன்று மாநிலத்தின் பல நகரங்களில் பயங்கரவாத செயல்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். முக்கியமான இடங்களிலும், நினைவுச்சின்னங்களிலும், மக்கள் கூட்டம் கூடுகிற இடங்களிலும் வெடிபொருட்களை கொண்டு தாக்குதல் நடத்தவும், மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்தவும் சதித்திட்டம் தீட்டி உள்ளனர். இதற்காக அவர்கள் ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் சேகரித்துள்ளனர். இந்த பயங்கரவாத அமைப்பினர் லக்னோவில் மட்டுமல்ல, கான்பூரிலும் உள்ளனர். கைது செய்யப்பட்ட 2 தீவிரவாதிகளின் கூட்டாளிகளை கைது செய்வதற்கு பல இடங்களில் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
கைது செய்யப்பட்டுள்ள 2 தீவிரவாதிகள் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதற்கிடையே ஐ.எஸ். அமைப்பும் இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி இருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக ஆன்லைனில் பயங்கரவாத பிரச்சாரம் நடத்தப்பட்டுள்ளது. ‘வாய்ஸ் ஆப் ஹிந்த்’ என்ற பெயரில் மாதம் தோறும் வெளியாகும் ஒரு ஆன்லைன் பத்திரிகையில், இளைஞர்களைத் தூண்டி விடும் வகையிலும், அவர்களின் மனங்களில் பயங்கரவாத நஞ்சை விதைத்து, வெறுப்புணர்வை பரப்புகிற வகையிலும் கட்டுரைகள், தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பற்றிய தகவல்கள் கிடைத்தைதத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ., வழக்கு பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் காஷ்மீரில் ஸ்ரீநகர், அனந்த்நாக் உள்ளிட்ட 7 இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள்  அதிரடி சோதனைகள் நடத்தினர்.
இந்த சோதனையின்போது ஏராளமான முக்கிய ஆவணங்கள், செல்போன்கள், கையடக்க கணினிகள், மடிக்கணினிகள், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்குகள் ,ஐ.எஸ். சின்னம் பொறித்த டி-சர்ட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags :

Share via