பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவதூறு வழக்கு

by Staff / 10-05-2023 02:25:47pm
பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவதூறு வழக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருந்த ரஃபேல் கடிகாரம் தொடர்பாக பாஜக மற்றும் திமுகவினரிடையே மோதல் எழுந்தது. இதையடுத்து ரஃபேல் கடிகாரத்தின் ரசீது எங்கே என்று திமுகவினர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, கடிகாரத்தின் பில் மற்றும் தனது சொத்து மதிப்போடு திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள் ஏப்ரல் 14ம் தேதி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.அதன்படி, தமிழநாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி அன்று சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி ‘DMK FILES’ என்ற பெயரில் சொத்து பட்டியலை வெளியிட்டார். அப்போது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுக அமைச்சர்கள் ஊழல் செய்து சொத்துக்கள் குவித்துள்ளதாக வீடியோ காட்சிகளுடன் செய்தி வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியை பல தொலைக்காட்சிகள், இணையதளங்கள் நேரலை செய்திருந்தனர். அண்ணாமலை வெளியிட்ட அந்த சொத்து பட்டியலில் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய குடும்பத்தினருடன் துபாய் சென்ற போது அங்குள்ள நிறுவனங்களில் முதலீடு செய்ததாகவும், தேர்தலின் போது அந்த நிறுவனங்களின் மூலமாக போது பணம் பரிமாற்றம் நடத்தப்பட்டது என பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், எந்த வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் முதலமைச்சரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில், வழக்கறிஞர் ஜி. தேவராஜன் என்பவர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.அதில், தமிழகத்தில் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தி மக்களின் ஆதரவை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் இது போன்று அவதூறு கருத்துக்களை வெளியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை மீது, அவதூறு சட்டத்தின் கீழ் உரிய தண்டனை வழங்கி உத்தரவிட கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கோடை விடுமுறை கால நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர், மனு மீதான விசாரணையை எட்டு வார காலத்துக்கு நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
 

Tags :

Share via