ரெயில் முன் பாய்ந்து ஊழியர் தற்கொலை
சேலம்-விருத்தாசலம் ரெயில்வே மார்க்கத்தில் உள்ள காரிப்பட்டி ரெயில்வே ஸ்டேஷன் அருகே நேற்று சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் உடல் சிதைந்த நிலையில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த சேலம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்த வாலிபர் மின்னாம்பள்ளி அருந்ததியர் காலனியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கவிபாரதி (வயது 24) என்று தெரிய வந்தது. சேலம் 4 ரோட்டில் உள்ள காளான் கடையில் இவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவர், அதிகாலையில் அவ்வழியே வந்த விருத்தாச்சலம் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. தற்கொலை செய்த கவிபாரதி 4 பக்கங்களில் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் அவர் 'நான் எனது கிருஷ்ணனை பார்க்க செல்கிறேன். அப்பா, அம்மா, அண்ணன், தம்பி யாரும் வேதனைப்பட வேண்டாம். பக்தியால் முக்தியடைய நினைத்தேன். நிறைய நாள் ஆகும் போல இருக்கு. அதனால் தான், இந்த வழியை முடிவு செய்தேன், என குறிப்பிட்டு ஸ்ரீ ராம ராம என பாடலை எழுதியுள்ளார். அரசாங்கத்திற்கு என்று தலைப்பிட்டு எழுதப்பட்ட மற்றொரு கடிதத்தில், எனது குடும்பத்தினரிடம் எனது உடலை புதைக்கவோ, எரிக்கவோ பணம் இருக்காது. அதனால் அரசாங்கம் எனது இறுதி சடங்கை நடத்த உதவுமாறு கேட்டுகொள்கிறேன். எனது குடும்ப மிகவும் வறுமையிலும், கடன் தொலையிலும் மிக மிக அதிகமாக வருந்தி தவிக்கிறது, என்றும் உருக்கமாக தெரிவித்திருக்கிறார். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கவிபாரதி உடல்நிலை சரியில்லாத தனது தாய், தந்தையின் மருத்துவ செலவிற்காக ரூ. 35 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாமலும், சரியாக வேலைக்கு செல்லாமலும் இருந்துள்ளார். இதனால், இனிவாழ வேண்டாம் என முடிவெடுத்து, கடிதம் எழுதி வைத்துவிட்டு ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருப்பது தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
Tags :